ராப்போழ்து

இரவுப் பொழுதே
இருளின் ஒளியே
உந்தன் மடியில்தான்
எனக்குத் தாலாட்டு.
வாத்தியங்கள் வேண்டாம்
வார்த்தைகள் வேண்டாம்
அமைதியாக வருடும் உன் பாட்டு.

யாமத்தை ரசிப்பவன் நான்
தூக்கத்தையும் துறந்தவனில்லை.
கொஞ்சம் இப்படி
கொஞ்சம் அப்படி.

துயிலில் இரவழகா?
தூங்காத நிலவழகா?
இரண்டும்தான்.
உணர்ந்தோர் உணர்வார்.கண்ட இடமோ
கால் பதியாத இடமோ
கற்பனை இடமோ
கனவினில் நுழைய
கட்டணம் தேவையில்லை
கட்டுப்பாடுகள் அங்கில்லை. 

குளிர்ந்த பனியோ
கண்சிமிட்டும் விண்மீனோ
ஆங்கமர் நிலவோ
அதையும் தாண்டின ஒன்றோ
யாமத்தின் வானம்
ஓர் அட்சய பாத்திரம்
தட்டுப்பாடுகள் அதற்கில்லை. மணிக்கணக்கில்
விழித்துக் களைத்து
விழிகளே
மணியடித்து அழைத்து
கண் செருகி
மனம் இளகி
மரணத்தை நெருங்கி
தொடாமலே திரும்பிடும்
தூக்கம்.

மஞ்சத்தில் புரண்டாலும்
மனம் உறங்க மறுத்து
எண்ணப் பறவையின்
கூண்டைத் திறந்துவிடும்
கவிஞர்கள் எண்ணிக்கையில்
தெரியும் அதன்
தாக்கம்.


தூக்கத்தில் உளறி
தூக்கத்தில் சிரித்து
செய்வதனைத்தும் கொஞ்சம் 
தூக்கலாகவே செய்யும் அது
விழிப்பும் உறக்கத்துக்கும்
இடைப்பட்ட ஒரு 
கிறக்கம். 

கூர்க்காவின் கம்பும்
தவளைகளின் வம்பும்
காற்றும் மரமும்
கர்ஜனைக் குறட்டையும்
சந்தடி சாக்கில்
சங்கீதம் பாடும் அது
மெல்லிசைக்கும் மௌனத்துக்கும்
இடைப்பட்ட ஒரு
நல்லிசை. ஒவ்வொரு ராப்போழ்தும்
இரவின் மடியில்
சாய்ந்து கொள்கிறேன்
அது எப்பொழுதும்
சாமரங்களுடனே
என்னை வரவேற்கிறது!- மதி

நன்றி : அறிமுகத்தவம்

கருத்துகள்

 1. அருமையான வரிகள்.. நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரம்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.

  நனைவோமா ?

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஜனவரி 04, 2011

  மஞ்சத்தில் புரண்டாலும்
  மனம் உறங்க மறுத்து
  எண்ணப் பறவையின்
  கூண்டைத் திறந்துவிடும்
  கவிஞர்கள் எண்ணிக்கையில்
  தெரியும் அதன்
  தாக்கம். ithu fantastic a irku

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..