நினைவுப் பாதை

ஒரு தூக்கங்கெட்ட ராத்திரியில்
தற்செயலாக
என் ஞாபகக் கணக்குகளைத்
திறந்து வைத்துக் கிளறுகிறேன்.

முடுக்கிவிடப்பட்டதும்
ஒரு சீட்டுக்கட்டைப் போல
என் நினைவலைகள்
முட்டிக்கொண்டு பின்னோடுகின்றன.

இந்த பத்தொன்பது வருஷங்களில்
நான் சந்தித்தவை
சிந்தித்தவை
சாதித்தவை
சமாளித்தவை......

கல்லூரியின் முதல் நாள்
பன்னிரெண்டாம் வகுப்பு
பள்ளிக்கூடம்
நண்பர்களோடு சினிமா
கட்டடித்துக் கிரிக்கெட் ஆடியது
காரைக்குடிக்குப் போய் கால்பந்து ஆடியது
(a+b)^2 மனப்பாடம் செய்தது
திருச்சி பஸ் ஸ்டாண்டில்
தொலைந்து போனது
ஸ்கூல் பஸ்ஸில்
கன்னியாகுமரி
ஆண்டு விழாவில்
ராஜா வேஷம்
என் நாலாங்கிளாஸ் எதிரி
அந்த குண்டுப்பெண்ணின் முகம்
அடிக்கடி பயமுறுத்துகிற
முதலைக் கனவு
மூணாங்கிளாஸில் வாங்கின
முதல் முதல் ரேங்க்
யுகேஜி கிளாஸின்
அஸ்பெஸ்டாஸ் கூரை வரை.........

கண்முன்னே
காட்சிகள் குவிகின்றன.

மேலும்
முயற்சித்து முன்னேறுகிறேன்
மூன்று வயது வரை
ஆச்சியிடம் வளர்ந்தது
அவள் வளையல் பிடித்து
கதை கேட்டது
அக்காவைக் கடித்து வைத்தது
குட்டி தொந்தி
பொக்கை வாய்ச் சிரிப்பு .....
ஆனால் இவையெல்லாம்
கேள்வி ஞானமாகவும்
காமெரா நிழலாகவும்தான் ......

எனில்.....
என் நினைவிலிருக்கும்
முதல் காட்சி ?

கண்டிப்பாக
எல்கேஜி வயசில்தான்
எங்கோ பதுங்கியிருக்கிறது.

அப்போது படித்த
பள்ளிக்கூடம்
வகுப்பறை
அப்போது வாழ்ந்த ஊர் .....
அந்த வீடு கூட
தோற்றமாக நினைவில்லை !

அந்த வீடு ....
காம்பவுண்டு ....
பஸ் ஸ்டாண்டு ....
கடை ....
ஆஹா !
கண்டு பிடித்தேன் !

இந்தப் பேரண்டத்தில்
என் நினைவின்
முதல் காட்சி
ஒரு இனிப்புப் பண்டம் !

ஆம்
நான்
உன்னியாப்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்!கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..