போதும் மனமே ..... வாழ்ந்திட வீடு போவோம்


துறை:முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது

துறைவிளக்கம்:முன்பு பொருள் தேடச் சென்ற தலைவன் மற்றொரு காலத்துப் பின்னும் பொருள் தேடும்படி கருதிய நெஞ்சை நோக்கி, நெஞ்சே! மாலை வரக்கண்டும் இம்மாலைப் பொழுது நம் தலைவி நம்மைக் கருதி வருந்துதற்குரிய காலமென்று முன் பிரிந்தவிடத்து கருதினேன் அல்லனோவென வருந்திக் கூறியது..

பாலை திணை - நற்றிணை

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே

- இளங்கீரனார்

பாடல் பொருள் விளக்கம் :
பருந்துகள் உறைந்து நிற்கும் ஆகாயத்தின் மேல் கிளைகளைப் பரப்பி , பொரிந்த அடியொடு நிற்கும் வேம்பின் ஒளி புள்ளிகளைச் சிந்தும் நிழலில் , கற்றறியாத சிறுவர்கள் நெல்லிக்காயை வட்டாக வைத்துப் பாண்டி ஆடிக்கொண்டிருப்பார்கள். அவ்வூர்க் கள்வர்கள் வழிப்போக்கர்களின் மார்புகளை நிலமாக்கித் தம் வில்லால் உழுது கொண்டிருப்பார்கள். 'இந்த வெங்காட்டில் என் மனவலிமையெல்லாம் மாய்க்கின்ற மாலைப் பொழுது வரவும் , "வீட்டிலே தலைவி விளக்கேற்றி வைத்துவிட்டுத் தலைவனின் வரவை எதிர்பார்த்திருக்கும் பொழுதல்லவோ இது" என்று எண்ணி எண்ணி வாடுபவன் தான்தானே , போதும் மனமே , சேர்த்த பொருள் போதும் , இனி ஊர் போய் வாழ்வோம்' என்று தலைவன் இன்னும் பொருளீட்டத் துடிக்கும் மனதிற்குச் சொல்வது.


இதையே என் மொழியில் இனி ......




ன் பெண்டாட்டி பிள்ளைக்கு
உணவுக்கு வக்கில்லை
உழைத்துப் பொருள் சேர்க்க
ர்விட்டு ஊர் வந்தேன் .
இங்கே தனியறையில்
இரவுகளும் நிலவுகளும்
அவளின் கதகதப்பின்றி
குளிர மறுத்து
வறண்டு புழுங்கும்.
ஏதோ ஒரு ஓரமாய்
ஏதோ ஒரு எண்ணமாய்
எதேச்சையாய் நடந்து போகையில்
தெரியாமல் மேலே படும் பந்துக்கு
மன்னிப்புக் கேட்டு வரும் சிறுவனிடம்
கேட்கக் கூச்சமாய் இருக்கும்.
என் மகன்போல்
இவனெல்லாம்
என்னையும் சேர்த்து
விளையாடுவானா ?
சரி
ஆதங்கங்களை
அனுசரித்துக்கொள்ளலாம்.
பாழ்பட்ட உலகமிது
அங்கங்கே அடிக்கடி
வீடுபுகுந்து கொள்ளையடிக்கும்
செய்திகளைக் கேட்கையில்
பயந்து வரும்
இயலாமைகளை என்செய்வது ?
விடுமுறைக்கு விடுமுறை
விளையாட்டுச் சாமான்களோடு
வீடு சேர்ந்து
மகனை அள்ளியணைத்து
மனைவியொடு பேசி
திருடிய தனிமைகளில்
அவசரமாய்ப் புணர்ந்து
கொஞ்சமே கொஞ்சம்
வாழ்ந்துவிட்டு
மீண்டும் இங்கு வந்து
செத்துச் செத்துச் சம்பாதிக்கிறேன்.
விளையாட்டுச் சாமான்களையா
என் மகன் கேட்டான் .....
விடுமுறையில் வந்து போகும் கணவனையா
என் மனைவி கேட்டாள் ......
ஏதோ ஒரு பிழைப்பு
என் ஊரிலும் கிடைக்கும் .
போதும் மனமே !
இத்துணை நாள்
புலம்பினோம் .
நாளை
புறப்படுவோம் !

கருத்துகள்

  1. What an excellent poet you are, with so much of talent and skills. According to me one of the best capability that one could have, is not having an awareness about " life and the way it goes on" but the art of conveying it to people , at the same time it should gather everybody's attention unanimously . I think u have got that talent. This will take u 2 great heights.

    பதிலளிநீக்கு
  2. lovely. thanks for putting in the ilangkeeranar paatu. it felt so good to read thinai! that too after 5 whole years :D

    and your rewrite is also very nice. i wish all those fathers and husbands who live alone in countries like gulf understand this and come back home :D

    பதிலளிநீக்கு
  3. thanks both ... i felt good writing this too , wrote for a contest in tamilmantram.com . keeping my fingers crossed about the results

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..