மெய் எனப்படுமோர் மின்னல் கீற்று


திருச்சி பேருந்து நிலையத்தில்
காணாமல் போன என்னை
கடத்திச் செல்லாமல்
கண்ணை நோண்டாமல்
வீட்டாரைக் கண்டுபிடித்து
கரிசனையாய்க் கூட்டி வந்த
பெயர் தெரியாத மனிதர்
திடீரென நினைவில் வருவார் .

ஒரு பயணத்தில் ஒரு பரீட்சையில்
ஒரு வாதத்தில் ஓர் உள்ளலசலில்
அடுத்த அடி தெரியாமல் விழி பிதுங்கும்
திக்கற்ற ஒரு கணம்
அறியாமை சுட்டுரைத்து
இறுமாப்புகள் இளகும் .

மன இருளில் தவறிழைத்து
வெளிச்சத்தில் அகப்பட்டு
விரல்களின் முனையில் நாணி நின்று
ஒளிவைத் தேடி ஓடி அலைந்தபின்
ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க
ஒரு கணம் உறுதி வரும்.

ஒரே ஒரு பாராட்டு
பல்கிப் பெருகிப் பிரவாகமாகி
மழையாய்ப் பெய்து நனைந்தபின்னும்
ஆறு மாசம் கழித்தொருவன்
நினைவூட்டிப் பாராட்டும் நிமிஷம்
நிஜத்தில் வெற்றி உரைக்கும் .

காக்க வைத்துக் காக்க வைத்துக்
காக்க வைத்துக் காக்க வைத்துக்
கடைசியாக ஒரு நொடியில்
என் காதலி
உண்டோ இல்லையோ
உருப்படியாய் ஒரு பதில் சொல்வாள் .

வயது கூடிப் பிரிந்து சேரும்
புனிதப் பொழுது
தற்செயலாய் வந்தாலும்
பதப்படுத்தி வைத்தாற்போல்
பழைய நட்பு மாறாமல்
அதே புன்னகைகளை
மீட்டுத் தரும் .

மாசங்களாய் வருஷங்களாய்
பழக்கத்தில் ஒன்றுசேர்ந்து
இருக்கிற இடைவெளியெலாம்
தேய்த்துத் தேய்த்து அழித்து வைத்தும்
காலம் பிரித்து வைக்கும் .
விடைபெறும் வினாடி !

செய்திகளிலும் சாலைகளிலும்
குற்றமற்ற மனிதர்களின்
சாவுகண்டு வாராமல்
உற்ற ஓர் உயிர்
விட்டுப்பிரியும் இரவில்
ஒரு சொட்டுக் கண்ணீர்
வலித்து வரும் .

காரணமே இல்லாமல்
கட்டுப்படுத்த முடியாமல்
சிரிப்பும் சந்தோஷங்களும்
தேர்ந்தெடுத்து ஒரு நாளில்
குளிப்பாட்டித் தலைதுவட்டும் .

.............................................................
.................................................

சொன்னதைச் சொன்னாலும்
உன்னதப் பொழுதுகள்
மின்னலின் கீற்றினைப் போல்
உண்மையைக் காட்டிச் செல்லும் .
நில்லாமல் தாண்டிச் செல்லும்
நகரப் பேருந்துகளை
துரத்தித் தாவித் தொற்றிப் பிடிப்பதுபோல்
இந்த மின்னல் பொழுதுகளில்
ஏறிப் பயணிக்க விழைகிறேன் .

எங்கள் நகரப் பேருந்துகளைவிட
ஒளி வேகமாய்ச் செல்கிறது !

ஜென் தத்துவங்கள் பேருண்மையின் ஸ்பரிசங்களை 'ஸார்ட்டோரி' என்றழைக்கிறது . 'ஸார்ட்டோரி' என்றால் அவர்கள் பாஷையில் மின்னல் என்று பொருள் .


கருத்துகள்

  1. i can see what manual of the warrior of the light is doing to u :)
    felt very good after reading a proper GS tamil kavidai after a long time.

    பதிலளிநீக்கு
  2. Actually it felt very good after writing some GS kavidhai too after a long time , and this was definitely in the heart much before the manual came across. Sure the manual added to it , but the lightning struck months ago .....

    பதிலளிநீக்கு
  3. hey.... it is true that all happiness & worries approach us like a lightening... i just want to know what does sortori philosophy says...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..