Nov 22, 2011

இப்படித்தானே நினைத்திருப்பாள்
கண்டதும் காதல்
என்பதைக் கூட
ஏற்றுக் கொள்ளலாம்

கண்டதும் காதல்
வந்ததாய் ஒருவன்
வந்ததும் காதல்
வருமோ அவன் மேல்?
மூன்று நான்கு முறை கூட
முழுதாய்ப் பேசியிருக்கவில்லை
இத்தனைக்கும் இவன்
முதலாமவன் கூட இல்லை
இவனொடு சேர்த்து
இதுவரை இருபத்து நாலு பேர் !

இதில்
எத்தனை பேர்க்கு 'என்னை'த் தெரியும்?
எத்தனை பேர்க்குக் 'காதல்' புரியும்?
எனக்கே இப்பொழுதென்ன அவசரம்?

காதல் தானே ?
வருகையில் வரட்டும்
பார்த்துக் கொள்வோம்.

..............

ஆசையினால் அல்ல
ஓர் ஆர்வத்தினால்
அவனைக் கவனித்தேன்.

எனக்குத் தெரியாதென்று எண்ணிக் கொண்டு
என்னையே பார்க்கிறான்
ஏதேனும் பேச்சு வளர்க்க
காரணங்கள் தேடுகிறான்
உரையாடல்கள் ஒவ்வொன்றையும்
நிறுத்தாமல் நீட்டிக்க
நிறைய முயற்சிக்கிறான்.
சாதுரியம் போதவில்லை.

ரசிக்கத்தக்க கோமாளி !

தனக்குத் தெரிந்த வித்தைகள் கொண்டு
கொஞ்சம் பகட்டுகிறான்
அங்கே இங்கே சிற்சில கணங்களில்
கவனம் கவர்கிறான்
எனக்கே என்னை இன்னும் அழகாய்
கவிதையில் காட்டுகிறான்.

ரசிக்கத்தக்க மேதாவி !

கொஞ்சம் சிரித்தால் போதும்
கற்பனைகள் வளர்ப்பான்.
முறைத்தால் பாவம்
வலிக்கப் போகிறது.

நான் ஏன் இவனை
காதலிக்கக் கூடாது ?
....................
...................
நான் ஏன்
காதலிக்கக் கூடாது?
....................
நான் ஏன் காதலிக்க வேண்டும்?


வேண்டாம்.
அது பெரிய தொல்லை.

கொஞ்சப் பழக வேண்டும்.
கொஞ்சம் கூடுதலாய்
குழைவு பழக வேண்டும்.

மணிக்கணக்கில் பேச வேண்டும்
காது வலிக்கும்.
மறுமுனையில் மௌனம் நீண்டால்
மனசு வலிக்கும்.

விருப்பு வெறுப்புகள்
ஒப்பிட்டு ஒப்பிட்டு
சுயம் கரையும்.
தினசரிச் செய்திகள்
ஒப்பித்து ஒப்பித்து
சுதந்திரம் குறையும்.

நேரம் வீணாகும்
நட்பே சுமையாகும்
கண்ணாடி கேலி பேசும்
பொய்ப் புழக்கம் பெருகும்.

சுற்றிமுற்றிக் காணும் காதல்களும்
சலிப்பைத்தான் கூட்டுகின்றன.
இது வேண்டாம்.

இதுவன்றி இன்னொரு விதமாய்
காதல் அர்த்தமாகும் வரை
கரையிலேயே நிற்போம்.

இவன்?


கண்ணியக்காரன்!
பேசினால் பேசுவோம்
சிரித்தால் சிரிப்போம்
அழைத்தால் மதிப்போம்
நெருக்கம் கூடுவதாய்த் தோன்றினால்
மௌனத்தால் இடைவெளி செய்வோம்.

நாமே கொஞ்சம் தெளியும்வரை
இவனைக் குழப்பியே வைத்திருப்போம்.

காதல் ......
வந்தால் வரட்டும்
பார்த்துக் கொள்வோம்.

........................................

நல்லவனாய்த்தான் தெரிகிறான்
அரிய சில நொடிகளில்
'நண்பன்' வரை வருகிறான்
பித்தனாய்த் தெரிகிறான்
பெரிய
பக்தனாய்த் தெரிகிறான்
கருமம் பிடித்தவன்
காதலனாய் மட்டும்
கற்பனையிலும் தெரிய மறுக்கிறான்.

ஆனாலும் அடம் பிடிக்கிறான்.
காத்திருக்கிறான்.

பெட்டர்மேக்ஸ் லைட்டேதான்
வேண்டும் என்றால்
பெண்மனம் பாவம் என் செய்யும்?

காலம் கடந்து விட்டது.
இனிமேல் இவன்மேல்
எது வந்தாலும்
அனுதாபத்தால் வருதோவென்று
எனக்கே என் மேல்
ஐயம் வரலாம்.

காதல் ......
அப்படி வரக்கூடாது.

நல்ல வேளை
புரிந்து கொண்டான்.

அப்படி இப்படி
விலகிப் போனாலும்
அடிப்படை நல்லவன்
......
நன்றாய் இருக்கட்டும்.

- மதி

(இந்தக் கவிதையை உங்களெல்லாருக்கும் முன்பாகவே, கவிதாவே வாசித்து ரசித்துப் பாராட்டியிருக்கிறாள். உங்களுக்குக் கவிதாவைத் தெரியுமா? தெரியாதவர்கள் அவளைப் பற்றி இங்கே வந்து தெரிந்து கொள்ளுங்கள் ..  )

12 comments:

Arun V said...

wow.. nice one..!!

SHIVA said...

நல்லவனாய்த்தான் தெரிகிறான்
அரிய சில நொடிகளில்
'நண்பன்' வரை வருகிறான்
பித்தனாய்த் தெரிகிறான்
பெரிய
பக்தனாய்த் தெரிகிறான்
கருமம் பிடித்தவன்
காதலனாய் மட்டும்
கற்பனையிலும் தெரிய மறுக்கிறான்!!

அருமை , தொடரட்டும் உமது கவிதைகள் கவிஞரே!!!!

மதி (GS) said...

@arun and @shiva .. thanks both

முனைவர்.இரா.குணசீலன் said...

இருக்கும்
இருக்கும்

இப்படித்தான் இருக்கும்.


கவிதை இப்படித்தான் இருக்கும்
காதல் இப்படித்தான் இருக்கும்
வலி இப்படித்தான் இருக்கும்.

அருமையான கவிதை.

Premnath said...

//நாமே கொஞ்சம் தெளியும்வரை
இவனைக் குழப்பியே வைத்திருப்போம்.

சொந்த அனுபவமோ ?? Enjoyed a lot..

மதி (GS) said...

@முனைவர் ஐயா ... நன்றி ..

@பிரேம்நாத் .. நன்றி பாஸ் .. ஒரு மாதிரியான சொந்த அனுபவம் தான் :-) ஆனால் பல பேருக்கும் பொருந்தக் கூடிய விஷயம்தானே !

Joker said...

காதல் என்று சொல்லலாகாது
நட்பு என்றிட இயலாது
நான் அவளை காணும் போதெல்லாம்
வேறெதுவும் தெரிவதில்லை

இவ்வுலகில் எத்தனை பேர் இருந்தும்,
யாரிடமும் இல்லா
ஒருசில பிழைகள் கண்டும்,
சிரித்து மட்டும் நிற்கிறது மனம்
இவளிடத்தில் மட்டும்...

வா என்றும் சொல்லாமல்,
போ என்று சொல்லாமல்,
வாட்டி எடுக்கும் இந்த நிலைமைதான்,
எனக்கேன் தந்தாய், சுடுசொட்டு சீனிப்பாகே!

nalla illa nu therium... :-)
ungaludhu super...~~claps~~

கொஞ்சம் சிரித்தால் போதும்
கற்பனைகள் வளர்ப்பான்.
முறைத்தால் பாவம்
வலிக்கப் போகிறது.

~~uyira kudukkalaam sir~~

pengal are like that, they want us to be happy and don't understand that she is the walking stick to that city called happiness. :-)

nallavan...
nandraai irukkattum...

மதி (GS) said...

@ Joker மிக நன்றி .. மறுமொழி சொல்லி வந்த கவிதையையும் மிக ரசித்தேன் ... இந்தக் கவிதை உங்களை இணக்கமாகத் தொட்டு விட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி .. ஆண்கள் பலருக்கும் வாய்க்கப் பெறும் அனுபவம் ! நீ என்ன நான் என்ன :-)

shobi_krish said...

தனக்குத் தெரிந்த வித்தைகள் கொண்டு
கொஞ்சம் பகட்டுகிறான்
அங்கே இங்கே சிற்சில கணங்களில்
கவனம் கவர்கிறான்
எனக்கே என்னை இன்னும் அழகாய்
கவிதையில் காட்டுகிறான்.

ரசிக்கத்தக்க மேதாவி !

- அழகான ஆழமான கவிதை:-) உங்கள் கவிசாரல் தொடரட்டும்:-)

மதி (GS) said...

நன்றி ஷோபி..

Athisaya said...

நான் ஏன் இவனை
காதலிக்கக் கூடாது ?
....................
...................
நான் ஏன்
காதலிக்கக் கூடாது?
....................
நான் ஏன் காதலிக்க வேண்டும்?
இத்தனை குழப்பம் கண'டிப்பாகத் தேவை...அதன் பின் வரும் முடிவுகள் ஆழமாயிருக்கும்.வாழ்த்துகள்

மதி (GS) said...

நன்றி அதிசயா ... நிஜமாகவே இத்தனை குழப்பங்களுக்குப் பின் அவள் ஆழமானதொரு முடிவைத்தான் எடுத்து விட்டாள் :-)

Post a Comment