மனித அலட்சியம் அல்ல. இது விபத்து.மிகுந்த வருத்தத்துடனும் அதற்குச் சமமான கோபத்துடனும் இதை எழுதுகிறேன். தேனியில் மலையேறப் போய் காட்டுத்தீயில் பலியான உயிர்கள் சகோதர சகோதரிகளின் இழப்பாகவே வலிக்கிறது. அந்த வலியின் மேல் நெருப்பை அள்ளி ஊற்றுவது போல ஊடகங்களும் பொதுஜனமும் CTCஐப் பலிகடாவாக்குவது அருவருப்பூட்டுகிறது.

ஒரு மலையேற்றம் எப்படிப்பட்ட சவால் என்பதைப் பல முறை உணர்ந்து தெளிந்தவன் நான். Chennai Trekking Club (CTC) எப்படிப்பட்ட அமைப்பு என்பதை நேரில் உணர்ந்தவன் நான். என்னைப் போலவே இவற்றை உணர்ந்தறிந்த சகோதர சகோதரிகளின் சார்பாக இதை எழுதுகிறேன். 

மலை ஏறுபவர்களில் இரண்டு வகையினரைப் பார்த்திருக்கிறேன். ஒரு மலை உச்சியைத் தொட்டதும் இந்த மலையே என் காலுக்குக் கீழே என்று இயற்கையை வென்றதாக உணர்பவர்கள் ஒரு வகை. அதே மலை உச்சியைத் தொட்டதும் அதன் மடியில் விழுந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி சொல்லி மண்டியிடுபவர்கள் மற்றொரு வகை. முதல் வகையினர் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். இரண்டு மூன்று அனுபவங்களில் இயற்கை அவர்களுக்குப் பாடம் புகட்டி இரண்டாம் வகைக்கு மாற்றிவிடும் அல்லது தன்னோடே எடுத்துக்கொள்ளும். 

நான் இரண்டாம் வகை. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இமய மலை வரை ஏறியிருக்கிறேன். இன்னமும் ஏறப் போகிறேன். ஒவ்வொரு முறை ஏறி இறங்கியதும், என்னையும் என் உடன் வந்தவர்களையும் பத்திரமாக அழைத்து வந்ததற்காகத் திரும்பிப் பார்த்து அந்த மலைக்கு நன்றி சொல்லிக் கொண்டு அடுத்த முறை வேறொரு மலையில் சந்திப்போம் என்று விடைபெற்று வருவேன்.  

இப்போது தேனியில் இறந்தவர்கள் பலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் CTC அழைத்துச் சென்றவர்கள் என்றால் அவர்கள் இரண்டாம் வகையினராகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். அதனால்தான் அவர்களின் இழப்பு என் குடும்பத்தில் நேர்ந்தது போல் வலிக்கிறது. இது மனித அலட்சியத்துக்கு இயற்கை தந்த தண்டனை அல்ல. இது விபத்து. எந்தத் தர்க்கத்தாலும் நியாயப்படுத்த முடியாத இயற்கையின் சீற்றம்.

வருடத்தில் சில முறை, வார இறுதியில் கூட்டமாய்த் திரண்டு, Decathlon உபகரணங்களுடன் மலையேறப் போகும் நம்மைப் போன்றவர்களுக்குத் தான் இது மலையேற்றம். அந்தந்த மலைக் கிராமங்களில் தினம் தினம் பொடி நடையாகவே  வெறும் காலில் அன்றாடத் தேவைக்கான பொருட்களைச் சுமந்து கொண்டு மலையேறுபவர்களுக்கு அதுதான் வாழ்க்கை. அந்த மக்களிடம் நம்மைப் போலப் படிப்பறிவோ உலக அறிவோ அவ்வளவாக இருக்காது. ஆனால் அவர்களுக்கு இயற்கையைப் பற்றிய ஆழமான புரிதல் இருக்கும். ஒரு சொட்டுத் தண்ணீரின் அருமை நம்மை விட அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சீரான ஒரு பாதை எத்தனை பிரச்சனைகளைத் தீர்க்கவல்லது என்று அவர்களுக்குத் தெரியும். நினைத்த நேரத்தில் ஒருவரைத் தொடர்பு கொள்வது எப்படிப்பட்ட வரம் என்பது அவர்களுக்குத் தெரியும். இயற்கை உணர்த்தும் குறியீடுகள் அவர்களுக்குப் புரியும். சமநிலை என்னவென்பது அவர்களுக்குப் புரியும். 

அவர்களின் இடத்துக்குப் போய்க் கற்றுக்கொள்ளாவிட்டால் நாமெல்லாம் எதையும் தெரிந்து கொள்ளப் போவதில்லை. உலகின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நம்மைப் போன்ற நகரவாசிகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாவிட்டால் இயற்கை நம் கதவைத் தட்டி அழைத்துக் கொல்லும் வரை அதன் கோபமோ, இந்தச் சமநிலை தவறுவதோ நமக்குத் தெரியவே தெரியாது. இந்தப் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு குரு கிடைப்பதுண்டு. CTC என்னைப் போல் எத்தனையோ பேருக்குக் குருவாக இருந்து கற்றுக்கொடுத்திருக்கிறது. கற்றுக்கொண்ட ஒவ்வொருவனும் தன்னளவில் இன்னும் பத்து பேருக்குப் பொறுப்பாகக் கற்றுக்கொடுக்கவும் வழி செய்திருக்கிறது. 

நானும் முதலில் மலையேறிய போது சாகசத்துக்காகத் தான் ஏறினேன். அனுபவம் பாடம் கற்றுக்கொடுத்த பிறகுதான் இயற்கையையும் மலையையும் வனத்தையும் மதித்துக் குருவாக ஏற்றுக்கொண்டேன்.  இயற்கை பற்றிக் கற்றுக்கொள்வது இருக்கட்டும். மலையேற்றம் மனிதத்தைக் கற்றுக்கொடுக்கும் அற்புதப் பயிற்சி என்பது உணர்ந்தவர்களுக்குப் புரியும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உறுதியும், கருணையும், சகோதரத்துவமும் மலையேறும்போது வெளிவரும். நினைத்தும் பார்த்திராத வலிமையை நம் மனமும் உடலும் பெற்றிருப்பதை உணர்வோம். முன்பின் தெரியாத தனித்தனி நபர்கள் என்றாலும், அந்த ஒரு அனுபவத்தில் அனைவரின் வலியும், அனைவரின் வெற்றியும் ஒன்றே என்ற புரிதல் ஏற்பட்டு மனிதமும் நட்பும் வளரும். அந்த உறுதியும் மனிதமும் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்றும் வேளை வரும்போது தானாக வெளிவரும் என்றும் நம்பித்தான் CTC போன்ற அமைப்புகள் முன்பின் அறிமுகமில்லாதவர்களை, தன் பொறுப்பில் மலையேற அழைத்துச் செல்கிறது. 

அந்த உறுதி இருந்ததால்தான் புதிதாய் மலையேறுபவர்கள் சிலர் நெருப்பிலிருந்து தப்பி வெளிவந்திருக்கிறார்கள். அந்த மனிதம் இருந்ததால்தான் தேர்ந்த அனுபவசாலிகள் சிலர் பிறரைக் காப்பாற்றத் தன் உயிரை விட்டிருக்கிறார்கள்.

CTC மட்டுமல்லாது பல அமைப்புகளுடனும் நான் மலையேறி இருக்கிறேன். அவர்கள் அளவுக்குத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் திட்டமிட்டு முறையாக இதைச் செய்பவர்களை இதுவரை கண்டதில்லை. மலையேற்றம் மட்டுமல்லாமல், சென்னையில் தொடங்கி மொத்தத் தமிழகத்திலும் பல நீர்நிலைகளைச் சுத்தம் செய்திருக்கிறார்கள். 2015 சென்னை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது அரசாங்கத்துக்கு முன் களத்தில் நின்று, அசாத்தியமான முனைப்புடனும் ஒழுங்குடனும் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். இயற்கையைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் நகரவாசிகளுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.  உடலினை உறுதி செய்து வாழும் ஒரு கலாச்சாரத்தை எண்ணற்ற இளைஞர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் ஆற்றலை உலகிற்கு நன்மை தரும் பாதையில் மடைமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு CTC. 

மலையேற்றங்களிலும் சுலபம், மிதமான கடின நிலை, வெகு கடினம் என்று வெவ்வேறு நிலைகளாகப் பிரித்து, ஒவ்வொரு நிலைக்கும் அதற்கேற்ற அனுபவமுள்ளவர்களோடு தான் அவர்கள் மலையேற்றங்களை  ஒருங்கிணைப்பதுண்டு. மலைக்குச் சென்ற குழு பத்திரமாகத் திரும்பி வரும் வரை அவர்களுக்குத் தேவையான எல்லா உதவியையும் கொடுக்க, நகரத்தில் ஒரு குழு எப்போதும் அவர்களுடன் தொடர்பிலேயே இருக்கும். ஒவ்வொரு மலையேற்றத்துக்கும் போதிய அனுமதிகளும் முன்னேற்பாடுகளும் இருப்பதை உறுதி செய்துகொண்டுதான் மலையேற்றங்கள் தொடங்கும். தேனியில் இறந்திருக்கும் அனுபவமிக்க மலையேறிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்திருந்தால் அவர்களின் அனுபவத்துக்கும் திறமைக்கும் வெகு சுலபமாகத் தப்பி வந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. 

இந்த விபத்து வேடிக்கை பார்த்துக் குறை கூறும் எவரையும் விட CTC அமைப்பினரைத் தான் அதிகம் பாதித்திருக்கும். அவர்கள் உங்களைப் போல அடுத்த வாரம் வேறு பிரச்சனை கிடைத்ததும் அங்கே போய் விவாதித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உங்களை விடவும் பெரிய பூதக்கண்ணாடியை வைத்து என்னென்ன தவறுகளைத் தவிர்த்திருக்கலாம் என்று அவர்களே இந்நேரம் தேடிக் கொண்டிருப்பார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்களும் மீள வேண்டி இருக்கிறது. அதற்குள் அவர்களைக் கொன்று புதைத்துவிடாதீர்கள். 


#IstandbyCTC #RIPbrothersandsisters

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..