பிள்ளையார்சுழி XI

எழுத்தைப் போலவே எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் கிரிக்கெட். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் ஒரு முறையாவது ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு All-time great XI-ஐத் தேர்வு செய்து பார்ப்பான். அந்தத் தோரணையில் நான் இங்கு ஒரு விஷேஷமான பதினோரு பேரை அறிமுகம் செய்யப் போகிறேன். இது "பிள்ளையார்சுழி XI" ! இந்தப் பதினோரு பேரும் வெவ்வேறு கட்டங்களிலும் தளங்களிலும் என் எழுத்தின் வாசகர்கள். என்னை எழுத வைத்ததிலும், வைப்பதிலும் இவர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. ஒரு வேளை , என் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந்தால் இவர்களுக்கும் நீங்கள் ஒரு நன்றியை நினைத்துக் கொள்ளலாம். இல்லாவிடில் , என்னை ஏற்றி விட்ட பாவச்செயலுக்காக இவர்களை நினைத்துக் கொண்டு உங்கள் தொடையை ஒரு முறை அழுத்தமாகக் கிள்ளிக் கொள்ளுங்கள் !!! என் வாழ்வில் இவர்கள் அறிமுகமான கால அடிப்படையில் இவர்களை இங்கே வரிசைப்படுத்துகிறேன்.

1. அப்பா :   ஒரே ஒரு சின்ன சம்பவத்தை இங்கு எடுத்துக்காட்டுகிறேன்,

கொட்டும் அருவியில் குளிப்பது சுகம்
கொஞ்சும் கிளியை ரசிப்பது சுகம்
கடற்கரை ஓரம் நடப்பது சுகம்
அதிகாலைப் பொழுதில் தூங்குவதும் சுகம்
இயற்கையின் அழகெல்லாம் 
செயற்கையால் அழியாதிருந்தால் 
இம்மண்ணுலகில் மனிதனாய்ப் பிறப்பதே தனி சுகம். 

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சிறு மகன் 'சுகம்' என்று தலைப்பிட்டு மேலுள்ள இந்தச் சிறப்பான கவிதையை (?! ) எழுதிக் கொண்டு திடீரென்று கொண்டு வந்து "அப்பா, நான் கவிதை எழுதியிருக்கேன் பாரு" என்றால் ..... பொதுவாக ஒரு அப்பா என்ன செய்வார்? எல்லா அப்பாவுக்கும் தன் மகன் எழுதினதென்பதால் தனி சிறப்புதான். சரி பையன் இன்று கவிதை எழுதி விளையாடுகிறான் போல என்று ஒரு கடனுக்கு "நல்லா இருக்கு" என்று சொல்லி அடுத்த வேலையைப் பார்ப்பதே வழக்கம். நல்ல வேளை கூடப் படிக்கும் பெண்ணைப் பற்றி எழுதாமல் இயற்கை பற்றி எழுதியிருக்கிறான் எனச் சில அப்பாக்கள் ஒரு பெருமூச்சு கூட விடக்கூடும். என் அப்பாவும் அன்று அப்படியே செய்தார். "பரவால்லியேடா, நல்லா எழுதிருக்கே" என்று தலை கோதித் தட்டிக் கொடுத்தார். நான் அளவுக்கு அதிகமாய் விளையாடுவேன் என்று அவர் அன்று எதிர்பார்க்கவில்லை போல! அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட எட்டு கவிதைகள் எழுதிக் கொண்டு போய் அவரிடம் நீட்டினேன்!!! ஐந்தாம் வகுப்பில்!!!!

என்னதான் மகனென்றாலும் விளையாட்டு இந்த அளவுக்கு விபரீதமானால் பல அப்பாக்கள் மகனை வேறு பக்கம் திசை திருப்பியிருப்பார்கள். அப்பா அவ்வளவு கவிதைகளையும் பொறுமையாகப் படித்துவிட்டுப் புன்னகைத்து மீண்டும் 'நல்லா இருக்கு' என்றார். இந்த இடத்தில் இப்படிச் சொல்கிறார் என்பதற்காக அவரின் இலக்கிய ரசனையை நீங்கள் குறைத்து மதிப்பிடவேண்டாம். அவர் பல புத்தகங்களை வாசிப்பவர். அன்று அவர் விதி பத்து மொக்கையான கவிதைகளை வாசிக்கவைத்துவிட்டது!

அந்த ஆர்வப்பெருக்கைப் பார்த்த பிறகு, என்னை உட்கார வைத்து, "இந்தக் கவிதைகளை எல்லாம் ஒரு நோட்டு போட்டு, தேதி குறித்து எழுதி வைடா.. பின்னாடி நீ படிச்சுப் பார்க்க நல்லா இருக்கும்" என்றார். Butterfly effect மாதிரி அந்த ஒரு இரவின் உரையாடல் தான் என்னை இன்று ஒரு எழுத்தாளனாக ஆக்கியிருக்கிறது. அதன் பின் என் பெரும்பாலான எழுத்துகளை வாசித்து விமர்சித்த என் முதல் ரசிகன் என் அப்பாதான். அந்த நோட்டும் அதனைத் தொடர்ந்து வந்த நோட்டுகளும் இன்று நான் பத்திரப்படுத்தும் தலையாய பொக்கிஷங்கள்!

என் அப்பா........ இந்த அணியின் கேப்டன் !!


2.3.4. சரவணமூர்த்தி , டேனி, அஸ்வின் :        பள்ளிக்கூடத்தில் கூடப் படிக்கும் நண்பன் ஒருவன் அடிக்கடி ஒரு நோட்டைத் தூக்கிக்கொண்டு வந்து "டேய் புதுசா ஒரு கவிதை எழுதியிருக்கிறேன், எப்படி இருக்குன்னு சொல்லுடா" என்றால் சில வேளை எரிச்சலாகத்தான் இருக்கும்! அப்படித்தான் இவர்களை நான் பலமுறை இம்சைப்படுத்தியிருக்கிறேன். எல்லா சோதனைகளுக்கும் ஒரு எலி அகப்படுவது போல இவர்கள் என்னிடம் அகப்பட்ட முதல் எலிகள். வீட்டுக்கு வெளியில் என் முதல் வாசகர்கள்!

ஐந்தாம் வகுப்பில் ஆரம்பித்த எழுத்தின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த வேளையில் உடனடி விமர்சனங்களைக் கொடுத்தவர்கள். செல்பேசிகள் பரவாத காலத்தில், கவிதை எழுதித் தொலைபேசியிலேயே பல நாட்கள் டேனியிடம் வாசித்துக்காட்டியிருக்கிறேன். பள்ளிக்கூட வயதிலேயே என் ஆதிமுதல் இலக்கிய உரையாடல்கள் இவனுடன் தான் நடந்தன! அஸ்வின் பள்ளி இடைவேளைகளின் படித்துப்பார்த்துவிட்டுத் தவறாமல் 'Typical you' என்று சொல்லுவான். என்னிடம் ஒரு தனி பாணியை முதலில் அடையாளம் கண்டவன் இவன். என்னை மதித்து முதல் முறையாகத் தன் சொந்த உபயோகத்திற்காய் என்னிடம் பாட்டெழுதிக் கேட்ட முதல் ரசிகனும் இவனும்தான்.

இவர்கள் பரவாயில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் என் எழுத்து கொஞ்சமே கொஞ்சம் பக்குவப்பட்டிருந்தது.

சரவணமூர்த்தி இவர்களிருவருக்கும் முன்னால் வேறு பள்ளியில் என்னுடன் படித்தவன். அதிகமாக மொக்கைக் கவிதைகளையே வாசிக்க நேர்ந்தவன். ஆனாலும் என்னை ஒரு வைரமுத்து வாலி அளவுக்கு ஏற்றிவிட்டு ஏற்றிவிட்டு எழுதத் தூண்டினவன். எழுத்து பக்குவமடையும் காலத்தில் இப்படி கண்மூடித்தனமாகப் பாராட்டும் ஒரு ரசிகன் நிச்சயம் தேவைப்படுகிறான். இன்று நல்ல கவிதைகளை வாசிக்கும் போதும் அப்படியே பாராட்டுகிறான். இவனுடைய அன்றைய வாழ்த்துகள்தான் இன்று ஓரளவு நன்றாய் எழுதவைத்திருக்கின்றன!


5. குமரி சீனிவாசன் ஐயா:   எழுத்தார்வலர் கதையில் தமிழ் வாத்தியார் இல்லாமலா? பன்னிரெண்டாம் வகுப்பில் எனக்குத் தமிழ் வாத்தியாராய் அறிமுகமாகி நல்ல வழிகாட்டியாகவும் நண்பராகவும் மாறின மனிதர்! என் எழுத்திற்கு வந்த முதல் தேர்ந்த விமர்சகர். என்னால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை தமிழ் படித்த இவர் வாயிலிருந்து வந்தபோழ்து இன்னும் பலப்பட்டது. புதுமைப்பித்தனின் தீவிர ரசிகர். புதுமைப்பித்தன், மௌனி, எம். வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், கு. ப. ரா., மேலாண்மை பொன்னுச்சாமி என என் இலக்கிய அறிவின் எல்லைகளை விசாலப்படுத்தினவர். தான் எழுதிய சிறுகதைகளை என்னிடம் காட்டிக் கருத்து கேட்டு விவாதித்தார். சபையில் செல்லுபடியாகும் என் முதல் இலக்கிய விவாதங்கள் இவரோடு நடந்தன.

புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளடங்கிய காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகத்தை என்னிடம் வாசிக்க இரவல் கொடுத்தார். மூன்று நாட்களில் வேறு வேலையின்றி மூழ்கி ரசித்துப் புதுமைப்பித்தன் பழகினேன்! அதன்பின் நான் சிலபேருக்குப் பெருமையாக அறிமுகம் செய்துவைத்த புதுமைப்பித்தனை எனக்குக் காட்டியவர். நடையிலும் கருத்திலும் எழுத்தில் என்னென்ன புதுமைகள் செய்யலாம் என்று இவருடன் உட்கார்ந்து விவாதித்திருக்கிறேன். நான்காண்டுகள் கழித்து ஒரு நாள் சிவகாசியில் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துத் தங்கவைத்து இரவில் இலக்கியமும் வாழ்வும் விவாதித்த நினைவு மிகப் பசுமையாக இருக்கிறது, அன்றிரவு நாங்கள் சேர்ந்து சாப்பிட்ட புரோட்டா வாசனையோடு! எம். வி. வெங்கட்ராமின் 'காதுகள்' வாசித்தபோதும், மதுரையில் ஒரு புத்தகக் கண்காட்சியில் மௌனியைக் கண்டுபிடித்த போதும் சந்தோஷமாக நான் முதலில் இவரைத் தான் அழைத்துப் பகிர்ந்து கொண்டேன். 'சூரியத் தெருக்களினூடாகப் பயணிக்கும் பாதசாரிகள்' என்ற இவரின் சிறுகதையை என்றாவது நீங்களும் வாசிக்க நேரலாம். அதைக் கையெழுத்துப் பிரதியாக வாசித்த இலக்கிய நண்பன் என்று நான் அப்போது பெருமைப்படுவேன்.

6. அருணா:   அஸ்வின் மூலமாக எனக்கு அறிமுகமான தோழி. 'என் நண்பன் ஒருவன் உன்னைப் போலவே கவிதைகள் எழுதிக் கொண்டு சுற்றுகிறான். சும்மா வாசித்துப்பாரேன்' என்ற ரீதியில் அறிமுகப் படுத்தி வைத்தான். இவள் என் எழுத்துக்குக் கிடைத்த முதல் ரசிகை. கவனிக்கவும்.... 'ரசிகை' - பெண்பால்!! தமிழ் எழுத்துருக்களெல்லாம் பழகாத காலத்தில் தமிழ்க் கவிதைகளைக் கொடுமையாக ஆங்கிலத்திலேயே தட்டித் தட்டி , செல்பேசியில் குறுஞ்சேதி அனுப்புகிறார்போல் அனுப்பிவைப்பேன். சளைக்காமல் எழுத்துக்கூட்டிப் பெருக்கிக் கழித்து வகுத்தெல்லாம் வாசித்துக் கருத்து சொல்வாள். 'நல்லா இருக்கு' என்பதைத் தாண்டி நீளமாக என் கவிதைகளைப் பற்றிக் கருத்துச் சொல்ல ஆரம்பித்த முதல் வாசகி அருணா. இப்படி மின்னஞ்சல் ஊட்டி வளர்த்த நட்பு. தானும் ஆங்கிலத்தில் கவிதைகளும் கதைகளும் நல்ல கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருக்கிறாள்.

நான் முதல்முதலில் வாசித்த வலைப்பதிவு இவளுடையதுதான். அதைப் பார்த்தபிறகே 'அட, நாமும் பதியலாமே' என்று தோன்றியது. பின்பு அந்த எண்ணம் 'மே மே' என வளர்ந்து கொண்டு வந்து விட்ட வினை தான் இன்று நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆக எனக்கு முதல் முதலில் வலைப்பதிவை அறிமுகம் செய்து வைத்து, என் எழுத்துக்கள் இணையம் மூலமாக உலகடையச் செய்த பேர் இவளுக்கே சேரும்.

7. 8. 9. விக்னேஷ், ஜெயந்த், முத்து:   கல்லூரி விடுதி நண்பர்கள்! கல்லூரியில் சில காலம் என் எழுத்தின் பிரத்தியேக வாசகர்கள். ஒரே வாசகர்கள் என்றும் கூட சொல்லலாம். இரவு வேளைகளில் கவிதை எழுதுகிறேன் கதை எழுதுகிறேன் என்று தூங்கவிடாமல் விளக்கை எரியவிட்டு இம்சித்த போதெல்லாம் என்னை எரித்துவிடாமல் புரண்டு படுத்துத் தூங்கின பொறுமைசாலிகள்! கல்லூரிக் காலங்களில் என் எழுத்தில் இன்னும் மெருகேறி, சிலபல புது முயற்சிகள் எடுத்தேன்.... வாசிக்கவும் விமர்சிக்கவும் இவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு பெரும் காரணம். 'கனவுத் தொழிற்சாலை' என்ற எங்கள் கல்லூரி நாடகக் குழுவை நால்வரும் சேர்ந்து உருவாக்கினோம். இன்னும் பல தளங்களில் வெறும் எழுத்தின் வாசகர்களாய் மட்டுமன்றி வாழ்வோடு பின்னிவிட்ட நட்பு இவர்களுடனானது.

விக்னேஷுக்கு என் கதைகளை வாசிப்பதை விட, என்னை வாசிக்க வைத்துக் கேட்பது பிடித்திருந்தது. முத்து ஒரு வித்தியாசமான வாசகன். ஒரு கதையை வாசிக்குமுன் கடைசி பத்தியை வாசித்துவிட்டு முதலிலிருந்து வருவான். இப்படியும் ஒருவன் கதை வாசிக்க முடியும் என்று நான் இவனைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். கடைசி வரியில் திருப்பம் வைத்து, அதை நோக்கி முதலிலிருந்து நகர்த்தி, உயிரைக் கொடுத்து எழுதி வைக்கும் கதைகளை இவன் இப்படி வாசிக்கும்போது லேசாக இம்சிப்பான். இந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கே பொறுமை கற்றுக்கொடுத்த வாசக நண்பன் இவன். ஜெயந்த்.... மூவரில் மிகவும் நேர்மையான விமர்சகன். இன்றும் பல கதைகளை இவன் வாசித்து 'நல்லா இருக்கு' என்று சொன்னபிறகுதான் எனக்கே நன்றாய் வந்திருக்கிறது என்று முழு நம்பிக்கை வரும். மூவரும் மிக நேர்மையாக விமர்சித்து, சமயங்களில் 'நல்லா இல்லைடா... இது குப்பை' என்று முகத்துக்கு நேராக அறைந்ததும் நடந்திருக்கிறது. இதனால் தான் இவர்கள் இன்னும் சிறப்படைகிறார்கள். இன்னும் என் எழுத்துக்கு நேர்மையான விமர்சனங்கள் இவர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.


10. காயத்ரி: கல்லூரி எனக்களித்த தோழமைகளில் பால் பாகுபாடு கொஞ்சம் பலமாகப் பார்த்திருந்தது. தோழர்கள் எக்கச்சக்கம் கூடினபோதும் தோழியர் விரல் எண்ணிக்கையில் மட்டுமே அமைந்தனர். இதை எண்ணி நான் சில சமயம் வருந்தியிருக்கிறேன். சில சமயம் மகிழ்ந்திருக்கிறேன். அந்த விரலெண்ணிக்கைத் தோழியரில் கட்டை விரல் போல் கணக்கைத் தொடங்கி வைத்தவள் காயத்ரி. இந்த நட்பை எண்ணி நான் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே அடைந்திருக்கிறேன். என்னை அறிமுக அளவில் மட்டும் தெரிந்து கொண்ட வேளையில் என் கவிதைகளுக்கு அறிமுகமாகி , அவைகளுக்கு ரசிகையாகி , எனக்குத் தோழியான பெண் இவள். என் படைப்புகளின் முதல் பதிப்பாளர் இவள்தான்! என் எழுத்துகள் கொண்ட நோட்டை வாங்கிச் சென்று வாசித்து, திருப்பித் தந்ததும் என்ன செய்வதென்று யோசித்து, சில கவிதைகளைக் கையெழுத்துப் பிரதியெடுத்துச் சேகரித்தாள்.

எழுத்தைத் தாண்டி எங்கள் நட்பு பலப்பட்ட போழ்தும் எழுத்து அமைத்த அஸ்திவாரம் அசையவே இல்லை. தன் குழப்பங்களைத் தீர்க்க என்னிடம் கவிதை கேட்டு வாசித்தவள் இவள். குழப்பங்களின் விடையறிய சில சமயம் அவற்றின் ஆழம் காண வேண்டுதல் அவசியமாகிவிடும். அப்படி நான் குழப்பிக்கொடுத்த வார்த்தைகளில் சில விடைகளைத் தேடி எனக்கே அடையாளம் காட்டியவள். சில ரசிகர்கள் மட்டும் ஒரு எழுத்தாளனுக்கு லேசாக கர்வம் காட்டிவிடக் கூடியவர்கள். இவள் ரசிகையாகி வந்து அந்தக் கர்வம் காட்டிவிட்டு , தோழியாகி வந்து அந்தக் கர்வக்கூட்டில் கிண்டலெறிந்து கலைக்கவல்லவளும் கூட . அந்தக் கர்வங்களின் நினைவுகளாலும் அந்தக் கிண்டல்களின் நினைவுகளாலும் இந்த அஸ்திவாரம் பலப்பட்டுக்கொண்டே
இருக்கும்!


11. கவிதா: இந்தப் பக்கத்தில் இரண்டு கவிதாக்கள் அறிமுகமாவார்கள். இவள் முதலாமவள். இருவரின் பங்கும் என் எழுத்துக் காலத்தில் வெவ்வேறு வகையில் பெரும்பங்காற்றியிருக்கின்றன. இந்தக் கவிதா என்றும் என் நினைவில் நிற்கக் காரணம் - எனக்கு முதல் முதலில் ராக்கி கட்டி என்னை அதிகாரப்பூர்வமாக 'அண்ணா'வாக்கியவள் இந்தத் தங்கைதான். இன்று வரை எனக்கு ராக்கி கட்டிய ஒரே பெண்ணும் இவளே. ஒரு துடிப்பான மிடுக்கான வாலிபனாக இதற்காக இங்கு நான் சந்தோஷிக்கும் காட்சி உங்களுக்குத் தெரிய வேண்டும் !

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை எல்லாம் தாண்டி நல்ல துடுக்கும், நிறைய வாயும், எல்லா விஷயங்களிலும் எட்டிப்பார்க்கத் துடிக்கும் நீள மூக்கும் கொண்டவளாக நான் வடிவமைத்து வைத்திருந்த என் கற்பனைத் தங்கைக்கு மிக அருகில் வந்த நிஜ மனுஷி இவளே. பற்றாக்குறைக்கு என் எழுத்தும் பேச்சும் வேறு இவளுக்குப் பிடித்துப் போய்விட்டன. முன் சொன்னது போல, அந்தக் கர்வம் தரவல்ல ரசிகர்களின் வகை இவளின் ரசனை. ஆனால் இவள் கர்வம் கலைக்கவெல்லாம் வருவதில்லை. ஒரு கர்வக்கார அண்ணனின் கர்வக்காரத் தங்கை போல என் கர்வத்தைத் தம்பட்டம் அடித்து சந்தோஷித்த பெண். ஒரு கல்லூரி மேடையில் நன்றாக விளையாடிவிட்டிருந்த ஒரு நாளில், பெண்கள் விடுதியில் தன் சக தோழிமார் எல்லாம் என் செல் நம்பர் கேட்டு தன்னை நச்சரித்த ஒரு நன்னாளில் (அது போல் நன்னாட்கள் அதிகம் வாய்ப்பதில்லை வேறு), அந்த அத்தனை ரசிகர் கூட்டத்தையும் ஒற்றை ஆளாய்த் திறம்படச் சமாளித்ததற்காய் இவள் மேல் பெருமைப்பட்டாலும், அதில் ஒரு ரசிகையைக் கூடக் கடைசி வரை கண்ணில் காட்டாமலேயே போனதற்காய் இவள் மேல் ஒரத்தில் கொஞ்சம் கோபமும் உண்டு!


கிரிக்கெட்டைப் போலவே களத்தில் விளையாண்ட பதினோரு பேர் இருந்தாலும், அணி என்பது தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தும் பன்னிரெண்டாம் ஆளோடு சேர்த்துதான். என் அணியிலும் அது போல இடம் பிடிக்கும் Twelfth man , பல சமயங்களில் என்னை ஆசுவாசப்படுத்தி , இம்சைப்படுத்தி , சந்தோஷப்படுத்தி , துக்கப்படுத்தி , குழப்பப்படுத்தி, தெளிவுபடுத்தி என்று என்னைப் படுத்தி எடுத்த ஒரு பட்டாம்பூச்சி - என் முதல் காதலி ! ஏனோ என் காதல் விளையாட்டிலும் சேர மாட்டேன் என்று அடம் பிடித்து, என் விண்ணப்பங்கள் அனைத்தையும் நிராகரித்து, twelfth man ஆகவே இருந்துவிட்டாள். கைகூடாத காதல் தான் என்றாலும், இது வரை என்னைத் தீண்டின ஒரே ஒரு காதல் உணர்வு என்றாகிறபடிக்கு இது ஒன்றும் கூடாத காதல் இல்லை. இந்தக் காதலைப் பல கோணங்களில் நான் நுகர்ந்து வாழ்ந்தாலும், என் எழுத்துலகில் இவள் ஆற்றிய பங்கை மட்டுமே இங்கு சொல்கிறேன். 

12. கவிதா (நான் புனைந்த பெயர்): என் வாலிபத்தின் இறுமாப்புகளை அசைத்துப்பார்ப்பவள் எவளோ என்று காத்திருந்த என் பேனா இவளைப் பார்த்துதான் முதலில் ஒரு பெண்ணை எழுதியது. என் பதிவில் கவிதாட்சரம் என்று நான் கவிதையில் கொண்டாடும் காதலுக்குக் காரணக்காரி இவளே! நீங்கள் என் காதல் கவிதைகளை ரசிக்கிறீர்கள் என்றால் மானசீகமாய் இவளுக்கு ஒரு நன்றி சொல்லிக்கொள்ளுங்கள். ஐந்தாம் வகுப்பில் தொடங்கியவன் இவளைப் பார்க்கும்வரை காதல் கவிதை எழுதவே இல்லையே! காதலித்துவிட்டுத் தான் கவிதை எழுத வேண்டும் என்ற வைராக்கியமும் சுலபத்தில் எந்தப் பெண்ணிடமும் காதல் காணாத என் கல்மனமும் தான் அதற்குக் காரணகர்த்தாக்கள்.

ஆனால் கொண்ட தாமதமெல்லாம் காரணத்துக்கே என்றாற்போல் இவள் என் வாழ்வில் மின்னலென வந்தாள். அவசரப்பட்டு நான் மின்னலென உவமிக்கப் போய், நீண்ட நேரம் தங்காமல் சட்டென என் வாழ்வினில் ஒளியேற்றிவிட்டுப் பிரகாசமாகவே விரும்பி வெளியேறிவிட்டாள். விருப்பமின்மையில் உள் நுழையாமலே போய்விட்டாள் என்பது இன்னும் சரியாக இருக்கும்.

கவிதா என்பது நான் என் படைப்புகளில் அவளுக்குச் சூட்டிய புனை பெயர். நிஜப் பெயர் கூவிட நித்தமும் ஆசைதான். ஆனால் அமைந்த உரிமைகள் அவ்வளவே! தங்கையின் பெயர் காதலிக்கா? அதெல்லாம் இல்லீங்க.... காதலிக்குப் பேர் சூட்டி விருந்து பாயசமெல்லாம் வைத்து முடித்தபின் தான் தங்கை ராக்கியோடு என்னை உரிமை கொண்டாடினாள். ஆதலால் தான் இந்தப் பெயர் ஒற்றுமை.


இந்தப் பன்னிரெண்டு பேர் இல்லாவிடில் நான் கனவு காண்பதும், சில நிஜம் காண்பதும், அதை எல்லாம் எழுத்தாக்குவதும் எந்த அளவுக்கு நடந்திருக்குமென்பது சந்தேகமே. இந்தப் பன்னிரெண்டு பேரை மட்டும் இங்கு விஷேஷித்துச் சொல்வதற்குக் காரணமே இதுதான்.

மற்றபடி என்னை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும், எனக்கு வரும் ஒவ்வொரு வாழ்த்தும் வசையும் எனக்கு இன்னும் இன்னும் கனவூட்டி நிஜம் காட்டி , பயணிக்க வைத்து , என் பயணங்களைப் பகிர்ந்துகொண்டே வரும் விஷேஷ நட்புகளே.

நிறைய பயணிப்போம் ! Ticket செலவு என்னுடையது :-)

தொடர்ந்து வாசிக்க..