Oct 28, 2015

காரியாலயம்(இந்தச் சிறுகதை சொல்வனம் இணைய இதழில் ஏற்கெனவே வெளிவந்தது)

நமக்குத் தொழில் கூவுதல். கூலி கொடுக்கிறவர்களுக்காக, அவர்களின் பெயரைச் சொல்லி அதன் கூடவே இன்ன பிற கவர்ச்சிகளைச் சேர்த்துச் செருகிக் கேட்பவர்களின் கவனத்தைத் திருப்புமாறு கூவுதல். விளம்பரப்படங்கள் எடுக்கும் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறேன். கூடவே நிறுவனப் படங்களும் எடுத்துக் கொடுப்பதுண்டு. இவை இரண்டுக்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் உண்டு. ஒன்றரை நிமிடங்களில் ஒரு பிராண்டை வாங்கச் சொல்லிக் கூவுதல் விளம்பரப் படம். கொஞ்சம் நீட்டி நிதானமாக, பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வருகிறாற்போல் ஒரு நிறுவனத்தின் வரலாறு, வளர்ச்சி, வருங்கால வாய்ப்புகள் என எல்லாவற்றையும் கோர்வையாக விளக்கிக் கூஉவுதல் (எழுத்துப் பிழை அல்ல, அளபெடை) நிறுவனப் படம் - கார்ப்பரேட் ஃபிலிம்! கான்ஃபரன்ஸ் அறைகளுக்காகவே உருவான ஒரு கலை வடிவம் இது. 

சமீபமாக ஒரு அரசு நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட படம் ஒன்று உயர்மட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படத்தைப் பார்த்த மந்திரி 'நல்லாயிருக்கே, ஏன் இந்தப் படத்துல நான் கூட ரெண்டு வார்த்தை பேசலாமே' என்று இந்தியில் சொல்ல, நிறுவனத்தாரும் உடனே 'மே மே' என்று சகல மொழிகளிலும் ஆமோதிக்க, படம் பந்தாக மீண்டும் என் கைகளில் வந்து விழுந்தது. மூத்த மந்திரி பேசினால் இளைய மந்திரியையும் பேச வைத்தாக வேண்டும். நிறுவனத்திலிருந்து என்னை அழைத்துப் புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டார்கள். படப்பிடிப்புச் செலவைக் கருத்தில் கொண்டு இரண்டு மந்திரிகளுக்கும் தோதுபட்ட ஒரு நாளாகப் பார்த்து இருவரையும் தனித்தனியே அவர்களின் அலுவலத்தில் ஓரிரு நல்ல வார்த்தைகள் பேச வைத்துப் படமெடுத்துக் கொண்டு, முன்பே எடுத்திருந்த படத்தோடு பொருந்தச் சேர்த்துத் தர வேண்டும். இதற்காக நான் தலைநகருக்குச் செல்லும் செலவுகளை எல்லாம் நிறுவனம் தந்து விடும். ஆனால் மந்திரிகளின் காரியதரிசிகளை எனக்கு அறிமுகப்படுத்துவதோடு அவர்கள் விலகிக் கொள்வார்கள். நல்ல நாள் பார்த்து இருவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து ஒருங்கிணைக்க வேண்டியது முழுக்க என் பொறுப்பு.

இதற்கிடையே ஒரு நாள் இளைய மந்திரி குடியரசுத் தலைவரோடு வெளி நாட்டில் பிரயாணம் மேற்கொண்ட செய்தி தொலைக்காட்சியில் வர, இவரைத் தான் நான் படமெடுக்கப் போகிறேன் என்று வீட்டில் சொல்லித் தம்பட்டம் அடித்திருந்தேன். பிள்ளையாருக்குப் பிடித்து வைத்த கொழுக்கட்டையை எறும்பு எடுத்துத் தின்பது போல! இரண்டு மூன்று முறை நாள் தப்பித் தப்பிக் கடைசியாக ஒரு முகூர்த்தம் வந்தது. எப்படியும் இரண்டு மந்திரிகளும் அன்று தலைநகரில் ஒரே மேடையில் அமருமாறு ஒரு நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது. 'கெளம்புடா கைப்புள்ள' என்று காரியதரிசிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே அறைகூவல் விடுக்க, ஆகாயமார்க்கமாகத் தலைநகரம் கிளம்பினேன். ஏதோ ஓர் உள்ளுணர்வு, திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யவில்லை. முதலில் வேலையை ஒழுங்காக முடித்து விட்டுப் பிறகு கூட ஒரு நாள் தங்கிச் சுற்றிப்பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று எண்ணம்.

Oct 19, 2015

என் கல்லூரி இருக்கும் கோவைகடைசியாக எப்போது கோவைக்கு வந்தேன் என்பதே நினைவில்லை. அவ்வளவு காலமாகி விட்டது. இந்த முறை கோவைக்கு உற்ற நண்பன் ஒருவனின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்தேன். கோவையில் உள்ள ஒரு பிரபலமான அரசுக் கல்லூரியில் தான் நான் பொறியியல் படித்தேன். 2005-இல் கல்லூரியில் சேர்வதற்காக மற்றும் ஒரு மாணவனாக இந்த ஊருக்கு வந்தவன் நான். நான்கு ஆண்டுகள் படித்து முடித்து விட்டு ஊரை விட்டுச் சென்று அப்படி இப்படி வாழ்க்கையின் ஓட்டத்தோடு கூடவே ஓடிப் பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கல்யாண மாப்பிள்ளையும் நானும் மிக நெருங்கிய கல்லூரி நண்பர்கள். எங்கள் நட்புக்கும் இப்போது பத்து வயதாகிறது. நண்பன் கல்யாணம் என்பது ஒரு தனி விசேஷம் தான். கல்லூரியில் சேர்ந்த காலம் முதலே தனக்கு வரப்போகும் பெண் யார் என்ற ஆர்வத்துக்கு இணையாக இருந்த இன்னொரு ஆர்வம் நண்பர்களுக்கு வரப்போகும் பெண்களைப் பற்றியது. இன்னும் இரண்டு மாதங்களில் எனக்குத் திருமணம் (அது தனிக்கதை. அப்புறம் பேசுவோம்). ஒன்றிரண்டு பேரைத் தவிர உடன் படித்த நண்பர்கள் பலரும் குடும்பஸ்தர்களாகி விட்டனர். விடுபட்டவர்களுக்கும் தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பயணம் தொடங்கும் முன் இந்த மன நிலைக்கு நான் வருவேன் என்று பெரிதாக நினைக்கவில்லை. கல்யாணத்துக்கு முந்தின நாள் நண்பரோடு சேர்ந்து பழைய கதைகள் பேச ஆரம்பித்து முளைத்த வினை, இன்று கல்யாணம் முடிந்ததும் சொல்லிக் கொண்டு விடைபெற்றுத் தனியாக இந்த ஊரைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன். காணும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு ஞாபகத்தைக் கிளறி விடுகிறது. கல்லூரி படித்த ஊருக்குப் பல வருடங்கள் கழித்து வந்து தனியாக ஞாபகங்களை மட்டும் அசைபோட்டுச் சுற்றும் அனுபவம் வெகு பரவசமாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்களைத் தர வல்லதால்தான் கல்லூரி நம் வாழ்வில் பெரிய சிறப்படைகிறது.

இந்தக் கல்லூரிக்கு வருகையில் எனக்கென ஒரு பெரிய அடையாளம் இல்லை. ஆனால் நான்கு வருடங்களில் வாழ்க்கையின் அடிப்படைப் பாடங்களையும், ஒரு அடையாளத்தையும், வெகு ஆழமான நட்புகளையும் உருவாக்கித் தந்தது இந்தக் கல்லூரி. விடுதிகளில் பற்பசை கடன் கேட்டு வாங்கிப் பல் விளக்கிய போதெல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை, பத்து வருடங்களுக்குப் பிறகும் இந்த நட்புகள்தான் நிலைத்திருக்கும் என்று. இதற்குப் பின் ஒரு கல்லூரியில் மேல் படிப்பெல்லாம் படித்தாலும் முதல் கல்லூரி முதல் காதலைப் போல இனிப்பாக மனதில் அப்பி இருக்கிறது.

Oct 7, 2015

பெற்றவர்களின் கவனத்துக்குமழை கொட்டும்போது
மணியடித்துக் கொண்டொரு
ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வந்தால்
உங்கள் பிள்ளைகளை
நன்றாகக் கவனியுங்கள்
பெற்றவர்களே!
ஐஸ்கிரீம் ஆசையை
அவர்கள் அணுகும் விதம் கொண்டு
பின்னாளில் அவர்கள் காதலித்தால்
எப்படி நடந்து கொள்வர்
என மூன்று வகைப்படுத்தலாம்.
உடம்புக்கு ஆகாது என்று
உங்கள் பேச்சைக் கேட்பவர்கள்;
உங்களைச் சம்மதிக்கவைத்து
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள்;
மற்றும்
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடியவர்கள்!

- மதி

ஐஸ்கிரீம் படம் தந்து உதவியவர்: Loring Loding