காசு இருக்கறவன் குடிச்சா தப்பில்லையா ?


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். குடியைப் பற்றி நான் எழுதுகிறேன் என்று தெரிந்தால் எக்கச்சக்கமாகச் சிரிப்பான். 'ஒரு குவாட்டர் விலை என்னன்னு தெரியுமாடா உனக்கு? ஒரே ஒரு நாள் குடிச்சிருக்கியாடா நீ? எந்த சரக்கு உசத்தி எது இல்லைன்னு தெரியுமாடா உனக்கு? நீயெல்லாம் குடியைப் பத்தி எழுத உனக்கு என்ன தகுதி இருக்கு?' என்று அவன் கேட்பது இந்த நிமிடம் என் மனக்குரலில் தெளிவாக ஒலிக்கிறது. எனக்குக் குடிப்பதைப் பற்றி ஒன்றும் தெரியாதுதான். ஆனால் கடந்த சில வருடங்களாகக் குடிப்பவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதியின் அடிப்படையில் எனக்கிருக்கும் ஒரு எளிய சந்தேகத்தை முன்வைப்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத குடும்பங்களின் பிள்ளைகள் பலரோடு நட்புக் கொள்வதற்கு ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தயவில் எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. வறுமையோடு வாழ்வதைப் பற்றிப் பல நேர்முகப் பாடங்களை எனக்கு அளித்து வரும் அனுபவம் இது. நான் பார்க்கும் பிள்ளைகளில் குறைந்தது இருபதில் ஒருவர் குடிப்பழக்கத்தால் பெற்றவரையோ அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் எவரையோ பறிகொடுத்தவர்களாக இருக்கிறார்கள். ஐந்தில் ஒருவர் வெகு விரைவில் அப்படி ஒருவரை இழந்து விடுவோமோ என்ற பயத்தை உள்ளூரக் கொண்டிருக்கிறார்கள். குடி என்பது அவர்களின் வாழ்வில் இருக்கும் பொதுப் பிரச்சனையாக இருக்கிறது. பெற்றவர்கள் குடிப்பதால் பிள்ளைகள் எவ்வளவு கவலை கொள்கிறார்கள் என்று பல பரிமாணங்களில் கண்டிருக்கிறேன். 'தந்தை' குடிப்பதால் அல்ல. 'பெற்றவர்கள்' குடிப்பதால் என்று பொதுவாகச் சொல்கிறேன். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

'எங்க அப்பா ரொம்ப நல்லவரு. ஆசையா என்ன அடிக்கடி பீச்சுக்கு இட்டுனு போவாரு. பாவம் குடிச்சுக் குடிச்சு வயித்து வலில செத்துப் போயிட்டாரு'

'எங்க வீட்ல தினமும் சண்டை.. அப்பா குடிச்சிட்டு வந்து அம்மாவையும் என்னையும் போட்டு அடிக்கிறாரு. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குப் போகவே பயமா இருக்கு'

'எங்க அண்ணன் ஒரு ஆக்ஸ்டெண்ட்ல செத்துப் போச்சி.. எவனோ ஒருத்தன் குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்து கொன்னுட்டான்'

'என் அம்மா சரி இல்ல.. சொல்லவே அசிங்கமா இருக்கு. ரெண்டு மூணு பேர் வீட்டுக்கு வராங்க. எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நெனைச்சிட்டிருக்கு இன்னும்'

'ஒரு பையன் தான் முதல்ல கத்துக் குடுத்தான். வெறும் பேப்பர்ல விக்ஸைத் தேச்சு வைச்சு நைட்டு ஃபுல்லா மூக்கை உறிஞ்சினே இருந்தா ஒரு மாதிரி ஜிவ்வுன்னு இருக்கும்'

'வீட்ல படிக்க வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்பா இல்லை. அம்மாவால முடியல. வேலைக்குப் போவணும்'

'அப்பா குடிப்பாரு. வீட்டுக்குக் காசு தர மாட்டாரு. அம்மா காசை ஒளிச்சு ஒளிச்சு வெக்கும். அப்பா நெறைய கடன் வாங்குவாரு. ஆனா ஒழுங்கா வேலைக்கும் போவ மாட்டாரு. யார்யாரோ வீட்டுக்கு வந்து கத்துவாங்க. அம்மாதான் ஒண்டியா சமாளிக்கும் பாவம்'

இதை எல்லாம் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். குடியால் வறுமைக்குடும்பங்கள் எவ்வளவு துயரத்துக்கு ஆளாகின்றன என்பது பொதுவாகவே உங்களுக்குப் புரியும். சமீபத்தில் தி இந்துவில் படித்த இந்தக் கட்டுரை மீண்டும் என்னுள் இதைப் பற்றி நிறைய எண்ணங்களைத் தூண்டி விட்டது. குடியை ஒழிக்க மாணவர்களின் துணை கொண்டு எடுக்கப்படும் இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி அடைந்து மாற்றத்தை உருவாக்கி வருவதாய் வாசித்தது மிகவும் நிறைவாக இருந்தது. இந்த முயற்சிகள் பரவலாக வெளியே தெரிய வேண்டும். ஒரு தீர்வு நிச்சயம் சாத்தியமாகலாம்.

என்னை இப்போது அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி - வறுமை இல்லாத இடங்களில் குடிப்பழக்கம் பாதகமில்லையா? காசு இருக்கிறவன் குடிச்சா தப்பில்லையா?



வறுமைக் கோட்டை ஒரு அளவுகோலாகக் கொண்டு பகுத்தால் கீழ்க்'குடி' மக்கள் குடியால் அழிவது எல்லாருக்கும் தப்பாய்த் தோன்றுகிறது. மேல்'குடி' மக்கள் நாகரீகமான பார்களில், மங்கலான வெளிச்சத்தில், மேற்கத்திய இசையின் பின்னணியில் உசத்தியான சரக்கைக் குடிப்பது அவ்வளவு ஒன்றும் தப்பில்லை என்றே பொதுவாக ஒரு கருத்து இருக்கிறதா இல்லையா? இந்த இரட்டை நியாயம்தான் எனக்குப் புரியவில்லை.

'குடி' என்ற வார்த்தையையே இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. 'Booze', 'sloshed', 'getting high' - இப்படியெல்லாம் சொல்லும்போது நாகரீகமாக இருக்கிறதா இல்லையா? 'Son of a bitch' என்பதற்கும் 'தேவிடியாப்பையா' என்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன? 'I can hold my liquor' - 'எனக்கு என் குடியின் அளவு தெரியும். நான் ஒன்றும் குடிக்கு அடிமையில்லை. நாகரீகமாக என் மன இதத்திற்காக அளவாக என் காசில் குடிக்கிறேன். நான் குடித்து விட்டு யாரையும் அடிப்பதில்லை. குடிப்பதற்காகத் திருடுவதில்லை. கடன் வாங்குவதில்லை. என் பிள்ளை குட்டிகளை அனாதைகளாக்கப் போவதில்லை. இதில் என்ன தப்பு?' இதுதான் இவர்கள் பெரும்பாலரின் வாதம். ஒத்துக் கொள்ளலாமா?

சில காலம் முன்பு பெங்களூரில் படித்துக் கொண்டிருந்தேன். என் கல்லூரியில் ஒரு freshers party. நகரங்களின் மேன்மட்ட மக்களின் கேளிக்கை ஒழுக்கங்கள் பொது ஒழுக்கங்களில் இருந்து பலவற்றைத் தள்ளுபடி செய்துவிடும். அந்த மாதிரியான ஒரு நாள். பார்ட்டி முடிந்து என் நண்பன் ஒருவன் அவனுடைய காரில் மற்றொரு தோழியையும் வேறு இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறான். எல்லாருமே போதையில் இருந்தார்கள். இல்லை இல்லை. They were all high! அதில் அந்தப் பெண் சுத்தமாகத் தன்னிலையில் இல்லை. அவளின் ஆடையும் அவள் கட்டுப்பாட்டில் இல்லை. வரும் வழியில் காரை நிறுத்தி விட்டுக் கொஞ்ச நேரம் என் நண்பனும் மற்றவர்களும் அவளோடு புணர்ந்திடலாமா என்று தீவிரமாக யோசித்திருந்திருக்கிறார்கள். அந்தப் போதையிலும் ஏதோ ஒரு கண்ணியம் அவனை உறுத்தவே, வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டு விட்டிருக்கிறார்கள். எனக்கும் நெருங்கின சில பல நண்பர்களுக்கும் மட்டும் தெரியும் கதை இது. அந்தப் பெண்ணுக்கே தெரியாது. டெல்லியிலும் பல இடங்களிலும் கற்பழிப்பு வழக்குகளைப் பற்றிக் கேள்விப்படும் போது அவனுக்கு நிஜமாகவே கோவம் வருகிறது. ஃபேஸ்புக்கில் இதைப் பற்றி வரும் கருத்துகளுக்கு முழு ஆதரவு தருகிறான். ஆனால், பெங்களூரில் அந்த இரவில் அவன் குடித்திருந்தான்.

அதற்கும் முந்தின வருடம் இதே மாதிரி freshers party-குப் போய் நான் அசிங்கப்பட்டதோடு இந்த மாதிரி நாகரீகம் நமக்கு வேண்டாம் என்று நான் ஒதுங்கி விட்டிருந்தேன். 'நீ குடிக்க மாட்டியா?' 'நிஜமாவா.. ஏ சும்மா காமெடி பண்ணாதே.. பால் குடிக்கிற பையனா நீ? come on be a man. start today' தோழர்கள் தோழிகள் எனப்பலர் போதைக்கும் அன்றைக்கு நான் ஊறுகாயாக வேண்டி வந்தது. எனக்குத் தேவைதான். அவர்களுக்குப் புரிய வைக்க முடியாது.

எதற்காகக் குடிக்கிறார்கள்? என் சிற்றறிவிற்கு எட்டிய வரை காரணங்களைக் கீழே அடுக்கி இருக்கிறேன். 'மச்சி' என்ற சொல் இப்போது இருபாலர்க்கும் பொதுவான சொல்லாகி விட்டமையால் பால் பேதமின்றிப் புரிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

{'Alcohol is the solution to all problems', 'ஒரே கடுப்பா இருக்கு மச்சி'. 'என் ஆளு என்னை விட்டுட்டுப் போயிட்டா(ன்)'. 'என் முதலாளி என்னை நாய் மாதிரி நடத்துறா(ன்)', 'என்னா வெயில் இந்த ஊர்ல. இந்த ட்ராஃபிக்ல வண்டி ஓட்டி செம கடுப்பாயிடுச்சு'} - <இவற்றில் ஏதோ ஒன்று> 'இன்னிக்குக் குடிச்சே ஆகணும்'

{மச்சி எவ்ளோ நாளாச்சு உன்னைப் பாத்து', 'நாளைக்கோட நீ வெளி நாட்டுக்குப் போயிடுவே', 'விடிஞ்சா உனக்குக் கல்யாணம்', 'மச்சி ஆஃபீஸ்ல சம்பளத்தை ஏத்திட்டாங்க', 'மச்சி லவ்வு ஓகே ஆகிருச்சு'} - <இவற்றில் ஏதோ ஒன்று> 'இன்னிக்குக் குடிச்சே ஆகணும்'

{'வெள்ளிக்கிழமை ராத்திரி', 'சனிக்கிழமை ராத்திரி', 'ஒண்ணாந்தேதி', 'என் பிறந்த நாள்', 'உன் பிறந்த நாள்', 'பீத்தோவன் பிறந்த நாள்', 'என்னா மச்சி நம்ம ஊர்ல இருந்து இவ்ளோ செலவு பண்ணி இந்த டூர் வந்திருக்கோம்', 'கோவா டூர்', 'பாண்டிச்சேரி டூர்'} - <இவற்றில் ஏதோ ஒன்று> 'இன்னிக்குக் குடிச்சே ஆகணும்' (நான் கோவாவுக்கும் போயிருக்கிறேன். பாண்டிச்சேரிக்கும் போயிருக்கிறேன். தவறாமல் இரு முறையும் நண்பர்கள் சொல்லக் கேட்டது - 'நீயெல்லாம் அங்க போயி என்ன புண்ணியம். வெளில சொல்லாதடாடேய்')

கோபம், துக்கம், ஏமாற்றம், விரக்தி, கொண்டாட்டம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, உற்சாகம், நட்பு, காதல் - எல்லாவற்றிற்குமே குடிக்கிறார்களே! அளவாகத்தான் குடிக்கிறார்களாம். அதிலும் அவர்கள் காசில்தான் குடிக்கிறார்களாம். அதனால் பாதகமில்லையாம். ஒத்துக் கொள்ளலாமா?

"காசில்லாதவன் மட்டமான சரக்கைக் குடித்து விட்டுக் குடல் கெட்டு வைத்தியம் பார்க்கக் காசில்லாமல் அரசு மருத்துவமனையில் செத்துப் போகிறான். அவன் பிள்ளை குட்டிகள் அனாதைகளாகி விடுகின்றன. காசு இருக்கிறவன் உசத்தியான சரக்கைக் குடித்து விட்டுக் கொஞ்சம் தாமதமாக உடல் நலம் கெட்டு அப்போல்லோவில் வைத்தியம் பார்த்துச் செத்துப் போகிறான். அவன் பிள்ளை குட்டிகளுக்கு அதற்குள் சொத்துபத்தும் காப்பீட்டுத் தொகையும் உறுதியாகி விடும். குடிக்கவே குடிக்காத உத்தம மகராசனும் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருந்து அதே அப்போல்லோவில் வைத்தியம் பார்த்துச் சாகப் போகிறான். என்றைக்காவது சாவதுதானே? அதற்காக ஏன் எல்லா இன்பங்களையும் அனுபவிக்காமல் இருக்க வேண்டும்? என் குடும்பத்திற்கான பொறுப்புகளைச் சரியாகச் செய்து விட்டு நான் அவ்வப்போது என் சந்தோஷத்திற்காகக் குடித்துக் கொள்கிறேன்." ஒத்துக் கொள்ளலாமா?


குடிக்கிறவர்களோடு எப்போதுமே என்னால் சகஜமாகப் பழக முடிவதில்லை. சமீப காலத்தில் சிலர் நட்பின் நிமித்தம் விதிவிலக்குகளாக ஆகி இருக்கிறார்கள். அவர்களோடும் கூட குடித்திருக்கும் போது என்னால் சகஜமாகப் பழக முடிவதில்லை. மேலே சொன்ன வாதங்களும் காரணங்களும் அவர்களின் நட்பால் தெரிந்து கொண்டவைதான். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்....

உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் தன்னிலை மறந்திருத்தல் சுகமானதுதான். நானே அனுபவித்திருக்கிறேன். ஆனால் அதற்கு மதுவைத் தேட வேண்டாம். இயற்கை, பயணம், காலார ஒரு நடை, உறக்கம், எழுத்து, வாசிப்பு, இசை, இணக்கமான சிலரோடு உரையாடல். அந்தத் தன்னிலை மறத்தல் இவ்வகைகளிலும் சாத்தியமாகலாம்.

விரக்தியிலும் துன்பத்திலும் குடிப்பதுதான் என்னைப் பொறுத்தவரை இன்னும் அபத்தமாகத் தோன்றுகிறது. இந்தச் சமயங்களில் குடியைத் தேடிச் சரணடைவது ஒரு இயலாமையின் வெளிப்பாடே போல் தோன்றுகிறது. 'நான் தோற்றுவிட்டேன்' என்று சாசனம் எழுதிக் கொடுப்பதைப் போலானது. குடித்துவிட்டுப் புலம்பி அழுது தீர்த்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை. மாறாக அது ஒவ்வொரு முறையும் அடிபடும் போதும் தன் மேல் நம்பிக்கை வைப்பதை விட மதுவைச் சார்ந்திருக்க வைத்து விடலாம். அடிபடாத மனிதன் இருக்க வாய்ப்பே இல்லை. அடிபட்ட பின்பு எழுந்திருக்கும் மனிதனை மது உருவாக்குவதில்லை. மனித மனம் அசாத்திய பலம் கொண்டது. எப்பேற்பட்ட அடியாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளவும் அதிலிருந்து மீளவும் சில சமயம் திருப்பி அடிக்கவும் அதற்குப் பிறப்பிலேயே வலு அமைந்து விடுகிறது. மதுவால் அதை மழுங்கடிப்பது தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்வதுதானே.

என் நண்பனிடமே ஒரு முறை கேட்டிருக்கிறேன். 'தெனமும் குடிக்கிறே.. உடம்புக்கு எதாவது ஆகிடுமோன்னு என்னிக்காவது பயம் வந்திருக்கா' என்று. 'கண்டிப்பா பயம் வந்திருக்குடா.. ஆனா அந்தப் பயத்திலயே சில சமயம் போய் குடிச்சிட்டு வந்திருவேன். அப்போதைக்கு பயம் போயிரும்' என்பான். மேலோட்டமாக நகைச்சுவையாக இருக்கலாம். யோசித்துப் பாருங்கள்.

ஒழுக்கத்தின் பரிமாணத்தில் பார்த்தாலும் சில விஷயங்கள் பிடிபடவில்லை. குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்லை. குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்லை. இதை நான் நிச்சயம் நம்புகிறேன். ஆனால் தனிமனித ஒழுக்கத்திற்கு முதலில் தனிமனிதனுக்குத் தன்னிலை தெரிந்து இருக்க வேண்டுமே. சலனப்பட்ட மனதும் சரக்கும் சேரும்போது எப்பேற்பட்ட ஒழுக்கக் கோட்பாடுகளும் தொலைந்து போகலாம். Freshers party சம்பவம் நினைவிருக்கிறதா? நாமே பின்னால் வருத்தப்படும் செயல்கள் பலவற்றையும் செய்வதற்கு மது ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று புரிந்தால் அதை வேறு மாதிரி பார்க்கத் தோன்றும்.

ஒவ்வொரு குடிகாரனும் எவனோ ஒருவனிடம் இருந்து குடியை ஒரு கலை போலக் கற்றுக் கொள்கிறான். குறைந்தது மற்றும் ஒருவனுக்காவது அதே கலையைக் கற்றுக் கொடுக்கிறான். பிறவிக் கடன் போலான ஒரு கடமை உணர்ச்சியோடு இந்தச் சங்கிலி வழிவழியாகத் தொடர்கிறது. குடிக்கிற ஒவ்வொருவருக்கும் அடிமனதில் உள்ளூர ஒரு குற்ற உணர்ச்சி இருப்பதால்தானோ என்னவோ பிறரை வம்படியாகக் குடிக்க வைத்து விடுகிறார்கள். திருடித் தின்ற பண்டத்தில் கொஞ்சத்தை இன்னொருத்தனுக்கும் பிட்டுக் கொடுத்தால் கொஞ்சம் குற்ற உணர்ச்சி குறையுமே அது போல! இப்படியே ஒவ்வொருவனாக இழுத்து இழுத்து எல்லாரும் குடிக்க ஆரம்பித்து விட்டால் ஒட்டு மொத்தமாக அந்தக் குற்ற உணர்ச்சியையே வேரோடு நீக்கி விடலாம். 'எல்லாருமே செய்கிறார்களே. நான் செய்தால் மட்டும் தப்பா' என்பதைப் போல.  இந்த மனநிலையினால்தான் நாம் சகஜமாக லஞ்சம் கொடுக்கிறோம்/ வாங்குகிறோம். இந்த மனநிலையினால்தான் நாம் சகஜமாக விதி மீறுகிறோம். அடி மேல் அடி வைத்து அந்த நிலையைக் குடி கிட்டத்தட்ட எட்டி விட்டது என்றே தோன்றுகிறது. இந்த மனநிலையினால்தான் இந்தத் தலைமுறை சகஜமாகக் குடிக்கிறது. இந்த சகஜ நிலைதான் என்னை ரொம்பவும் வருத்தப்பட வைக்கிறது.

என்னைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்தாதவரையிலும், நீ குடித்து விட்டு வாந்தி எடுத்து அதை நான் கழுவும் நிலை வராத வரையிலும் நீ குடிப்பதால் எனக்கொரு பிரச்சனையும் இல்லை என்ற அடிப்படையில் தான் இந்த நட்புகளோடு பழகி வருகிறேன். தன் உடலையும் ஒழுக்கத்தையும் தானே அழித்துக் கொள்வதற்கும், தன் தோல்வியை ஏற்றுச் சரணாகதி அடைவதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பூரண சுதந்திரம் உண்டு. அதனால் நான் எவரையும் குடிக்காதீர்கள் என்று வற்புறுத்தவில்லை. ஏதோ எனக்கொரு கேள்வி. நிஜமாகவே அதற்கு நியாயம் புரியவில்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். நிதானத்தில் இருந்தால் யோசித்துப் பாருங்கள்.

காசு இருக்கறவன் குடிச்சா தப்பில்லையா?

தனிமனிதச் சுதந்திரம் வாழ்க! சம நியாயம் வாழ்க !

-மதி


படங்கள் அளித்து உதவியோர்க்கு மனதார நன்றி

Dominick

Christian Weidinger

கருத்துகள்

  1. திருந்த நினைப்பவர்களின் உறவுகள் யாராக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்க...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாடிசம்பர் 14, 2014

    Sir, Really super, Kalatitingae.

    பதிலளிநீக்கு
  3. குடியைப் பற்றி இவ்வளவு தெளிவான நாயமான கேள்வியும் பதிலும் நான் படித்ததில்லை. நீங்களும் என்னைப்போல் சிந்திப்பதால் அடடா! எனக்குக் கூட துணையுண்டே என மகிழ்கிறேன். நான் குடிப்பதில்லை என என்னை எந்த ஒரு பிரான்சியரும் கேலி செய்யவில்லை, இதைத் தான் மிகக் கவனிக்க வேண்டும்.30 ஆண்டுகள் இவர்களுடன் வாழ்ந்து விட்டேன். மது அருந்தாதவன் எனும் மரியாதை ,இன்றும் அவர்கள் வசம் உண்டு. நம்மினத்தவர் கேள்வியையோ, உதாசீனத்தையோ நான் பொருட்படுத்துவதேயில்லை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி யோகன்.. நிஜமாகவே நீங்கள் யோகம் செய்திருக்கிறீர்கள்தான். நல்ல மக்கள் உங்களைச் சுற்றி இருக்க வேண்டும். ஆனால் ஐரோப்பியர்களைக் குறித்து எனக்கு வேறுபட்ட ஒரு அனுபவமும் உண்டு. நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு ஐரோப்பிய வணிகத் தொடர்புகள் உண்டு. அங்கிருந்து சில பிரமுகர்கள் இங்கு வந்திருக்கும் போது ஒரு நாள் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விருந்தில் என்னைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று என் மேலாளர் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் "நீ குடிக்க மாட்டாய். வரும் ஐரோப்பியர்கள் யாராவது உன்னைக் குடிக்கச் சொல்லி மறுத்து விட்டால் அதை அவர்கள் அவமானமாகக் கருதி விடுவார்கள். அதனால் பேசாமல் நீ வராமலேயே இருந்து விடு"... பிரான்ஸியரோ, இந்தியரோ, ஐரோப்பியரோ - எல்லா இடங்களிலும் இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..