Jul 26, 2014

அகநுண்ணுணர்வுகளும் ஆச்சரியக் குறிகளும்


புத்தகம் : பெயர் தெரியாமல் ஒரு பறவை (சிறுகதைகள்)
எழுத்தாளர் : வண்ணதாசன்
பக்கங்கள் : 112
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 3 வாரங்கள்

ஒரு வரியில் : அகநுண்ணுணர்வுகள். அதுதான். அதேதான். ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்.

வேகாத வெயிலில் காயாது காய்ந்து சிறகு களைத்துப் பறந்து திரியும் பறவைக்கு ஒரு புண்ணியவான் வீட்டு மொட்டை மாடியின் கல் தொட்டியில் குடிக்கத் தண்ணீர் கிடைப்பது போன்ற தருணம் வண்ணதாசனை வாசிப்பது. வாழ்க்கை அதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்கும். நின்று நிதானித்து அதை அசைபோட நேரம் கிடைத்தால்தான் வண்ணதாசனை வாசிக்க முடியும் போல. அவர் பாட்டுக்கு மழை எப்படிப் பெய்கிறது, அணில் எப்படி ஊர்கிறது, ஆட்டுக்குட்டி எப்படி மேய்கிறது என்றெல்லாம் கவனிக்க வைத்து விடுவார். அடுத்த நாள் பிழைப்பைப் பார்க்கப் போகிறவனுக்கு இதெல்லாம் வாகாகுமா? வண்ணதாசனை வாசிப்பதற்கு ஒரு பிராப்தம் வேண்டும். பிழைப்புக்கும் பணத்துக்கும் பிரச்சனை இல்லை என்ற மனநிலையில்தான் அவரை வாசிக்க முடியுமோ என்னவோ. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த மாதிரி எண்ணங்கள் வரலாம்.

ஆனால் நிஜத்தில் அவரை வாசிக்க வேண்டிய பிராப்தம் அமைதி சார்ந்தது. மனதில் அமைதி இருக்கிற கணங்களில் தான் இவரை ரசிக்க முடிகிறது. அமைதிக்கும் பொருளுக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சில காலம் முன்னால் மொட்டை மாடி இரவுகளை இலக்கியம் பேசிக் கழிக்க வாகாக என் நண்பர்கள் சிலருக்கு நேரம் இருந்தது. எல்லோர் மனதிலும் அமைதி இருந்தது. 'மொட்டை மாடி இலக்கியக் குழு'! அந்த மாடியில் பல முறை வண்ணதாசன் சிலாகிக்கப்பட்டிருப்பார். கவித்துவ முரண் போல இன்று பிழைப்பின் நிமித்தம் அந்தக் குழு கூடிப்பேச வாய்ப்பற்றுச் சிதறிக் கிடக்கிற நேரத்தில் இந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். என் பிறந்த நாள் ஒன்றிற்காக நண்பர்கள் சேர்ந்து 'GS என்ற பறவைக்கு' என்றெழுதி மொட்டை மாடி இலக்கியக் குழுவின் சார்பாக அன்பளித்த புத்தகம் தான் நான் வாசித்த இந்தப் பிரதி. அந்த வகையில் இந்தப் பிரதி எனக்கு ஒரு அடையாளச் சின்னம் கூட!

Jul 7, 2014

மொழி பெயர்த்துக் கிடைத்த ஒரு குதிரைச் சவாரி


புத்தகம் : கருப்பழகன் (Black beauty என்ற புகழ் பெற்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் : அன்னா சிவெல் (தமிழில் யூமா வாசுகி)
பக்கங்கள் : 200+
எடுத்துக் கொண்ட நேரம் : 1 வாரம்

ஒரு வரியில் : ஒரு குதிரையின் வாயிலாகவே சொல்லப்படும் ஒரு குதிரையின் வாழ்க்கைக் கதை. மனிதர்களைப் பற்றியும் குதிரைகளைப் பற்றியும் நிறைய சிந்திக்க வைக்கும். மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆழமான புத்தகம்.

1870-களில் ஆங்கிலத்தில் அன்னா சிவெல் என்ற பெண்மணி எழுதிய புகழ் பெற்ற நாவல். ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே அதிகமாக விற்பனையாகி இருக்கும் முதல் பத்து புத்தகங்களுள் ஒன்றாம். Black beauty என்ற பெயருடைய ஒரு குதிரையின் கதை. இது ஒன்றும் போர்க்குதிரை அல்ல. இங்கிலாந்தின் தெருக்களில் பிரபுக்களுக்கு வண்டியிழுத்த சராசரிக் குதிரைதான். ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சரித்திர முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கையாக மாறி அது பெற்ற அனுபவங்களையும் புரிதல்களையும் அதன் பார்வையிலேயே விவரிக்கிறது இந்தக் கதை. தன் பதின்வயதிலேயே ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஆனவர் அன்னா சிவெல். பிறகு அவரின் வாழ்க்கை முழுக்க அவர் நடமாடியது குதிரைகளின் மேல்தான். அதனால் குதிரைகளைப் பற்றி ஆச்சரியப்படும் அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார். கடற்கரையில் குதிரைச் சவாரி செய்து மட்டுமே குதிரைகளோடு பரிச்சயமான நம் தலைமுறையினர்க்கு இந்தப் புத்தகம் ரொம்பப் புதிதாக இருக்கும்.