Aug 26, 2013

அம்பலக்குளத்தில் முங்கியபடி மூன்று நாட்கள்பல வருட காலமாய்ப் பக்கத்திலேயே இருந்திருந்தும் நாம் தொட்டறிந்திராத விஷயங்கள் எல்லோருக்கும் சிலது இருக்கும் - அலமாரியில் இருக்கும் புஸ்தகம், அடுக்களையில் இருக்கும் ஐந்தறைப் பெட்டி, அதிர்ஷ்டம் குறைந்தவர்களுக்குக் காதலி கூட! அது போலத்தான் எனக்குக் கேரளம்! 'இந்தாத்தானே இருக்கு... எப்பயாவது போவோம்' என்ற மனநிலையிலேயே வாழ்வின் கால் பாகத்தைக் கழித்து விட்டேன். சின்னப் பிள்ளையில் விவரம் அறியாத பிராயத்திலும், கல்லூரிச் சுற்றுலா என்ற பெயரில் மந்தையாட்டைப் போலவும் எட்டிப்பார்த்ததுதான். கேரளா ஏனோ எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. சமீபத்தில் நண்பர் ரகு ஒரு நாள் சாயந்திரம் தூக்கத்தில் எழுப்பி விளித்து, "ஜி.. கேரளால எங்க வீட்டில ஒரு சின்ன விசேஷம். வரீங்களா எல்லாருமாப் போவோம்" என்றார். சடாரென்று அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

ஒரு வெள்ளிக் கிழமை விடுப்பெடுத்துக் கொண்டு நான், ரகு, சிவா, பிரபு என்று நால்வரும் கிளம்பி விட்டோம். சென்னையில் இருந்து ஷோரனூர் வரை முன்பதிவு செய்த இரயில். அங்கிருந்து பட்டாம்பி வரை முன்பதிவு செய்யாத இரயில். பட்டாம்பியில் நள்ளிரவில் சென்றிறங்கி அங்கு திறந்திருந்த ஒரே ஒரு சாயாக் கடையில் அரை மணிக்கொரு தரம் சாயா குடித்தபடியே பொழுதைப் புலர வைத்துவிட்டு, அங்கிருந்து குன்னங்குளம் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்துக் குன்னங்குளத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக் காவீடு கிராமத்தில் இறங்கி அங்கிருந்து ஈரமான சாலை ஒன்றின் வழியாகக் கொஞ்ச தூரம் நடந்து நாங்கள் சேர வேண்டிய வீட்டை அடைந்தோம். அந்தப் பட்டாம்பிச் சாயாக் கடையில் பத்திரி என்று ஒரு ஐட்டம் சாப்பிட்டோம். எல்லா இடத்திலும் கிடைக்குமாம். தனியாகவும் சுவைக்கவில்லை. சாயாவோடும் சுவைக்கவில்லை. இந்தக் கேரளப் பயணத்தில் என்னைப் பெரிதும் கவராத ஒரே விஷயம் அதுதான்.

நாங்கள் போனது ரகுவின் தாத்தா வாழ்ந்த வீடு. தற்போது அவரின் பாட்டியும் தாய் மாமா குடும்பமும் வசித்து வருகிறார்கள். நல்ல அமைதியான சூழலில் இந்தப் பக்கம் நூறு தென்னை, அந்தப் பக்கம் நூறு தென்னை, நடுவில் ஒரு திண்ணை வைத்த ஓட்டு வீடு. முதல் பார்வையிலேயே பிடித்துப் போய்விட்டது. அந்த வீட்டின் திண்ணையில் மறைந்த ரகுவின் தாத்தாவின் சாய்வு நாற்காலி இன்னும் கம்பீரமாய் அமர்ந்திருந்தது. காவீடு கிராமம் குருவாயூரிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவுதான். ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் தேடி வராத ஒரு இயல்பான, மெதுவான, அழகான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த கிராமம் அது! கெல்ஃபின் பணம் ஊரிலிருந்த வீடுகளின் கட்டுமானத்தரத்தில் பிரதிபலித்தது. ஊர்வாசிகள் எல்லோரையும் எல்லோர்க்கும் தெரிந்திருந்தது.

Aug 19, 2013

கண் சிப்பி


செடார் மரத்தின்
உச்சிக் கிளையினின்று
தேவ தூது தாங்கி வரும்
ஒற்றை மழைத் துளி
இறங்கி
இறங்கி
இறங்கி நெருங்கி
நோக்கி நின்ற விழியில் விழுந்து
கண் இமைத்த ஒரு கணம்
எல்லாமே
தெரிந்து மறைந்தது .

- மதி

(புகைப்படம்: நண்பர் விஷ்ணு)

Aug 6, 2013

மங்குல் வெள்ளம் கடலினும் பெரிதேநெல் அறியும்.
மேகம் ஒளித்து வைத்திருக்கும்
துளி மழை
கடலினும் பெரிதென.
அவள் உள்ளம்
ஒளித்து வைத்திருக்கும்
ஒரு சொல் விடை
அது போலவே!

- மதி


மழை கொணர் மகளிர்மாலைப் பொழுதுகளில்
மாம்பலம் இரயிலடியில்
மங்கையர் இன்னும்
தாவணியுடுத்தித் தழைய வருகிறார்கள்.
சென்னையில் மழை பெய்யலாம்.
தப்பில்லை !

- மதி

( படம் தந்து உதவிய புண்ணியவான் - WoodleyWonderWorks )