ஒரு நாத்திகன் ஓர் ஆத்திகன் ஒரு நரன்




"ஆதாரம் காட்டச் சொன்னால்
அவதாரக் கதைகள் சொல்லி
அதன் மேலும் பொய்கள் சொல்லி
அழுத்தித் திணித்தல்லவா
நம்பச் சொல்கிறீர் ?
நீர் செய்வது
மூளைச் சலவை "

"அவதூறு பழியெல்லாம்
அழகாய்ச் சபையில் பேசிவிட்டு
அன்றிரவே ஒளிவுமறைவாய்
'மனசுல வச்சுக்காத சாமி' என
கன்னத்தில் போட்டுக்கொள்ளும்
கபட நாடக நாத்திகர் தானே
நாட்டில் பலர் இன்று ?
நீர் செய்வது
பச்சோந்திச் செயல் "

"கடவுளே !
எப்ப்பிடியாவது
எனக்கு ஒரு
.....................
........................."



"வருவதெலாம் விதியென்று
வெந்ததைத் தின்று கொண்டு
வேடிக்கை பார்த்திருந்து
வெறுமனே உயிர்த்திருந்தால்
நாளையின் பசிக்கு
நாராயணன் வந்து
படியளப்பானா?"

"ஆழி நுரைப்பதுவும்
ஊழி நிலைப்பதுவும்
அதில் நாம் இருப்பதுவும்
அவனை நீ தூற்றுவதும்
அதை நான் கேட்பதுவும் கூட
அத்தனையும் விதிக்கப்பட்டதே
என்ன செய்ய?"

"கடவுளா?
அவன் மட்டும்
என் கையில் சிக்கினான்
.................
..................."

----------------------------------------------------------

"படைப்பு நிகழ்கையில்
பரமபிதா எவரும்
வெளிச்சம் உண்டாகுகவென
வாக்கொன்றும் அருளவில்லை.
Big Bang
தெரியுமா உமக்கு?"

"அணுவைத் துளைத்து
அதனுள்ளும் துழாவி
ஆராய்ந்தும் புரியாமல்
ஆதித் துகள்தனை
God's particle
என்றுதானே அழைக்கிறீர் ?"

"மூணு ஓவருக்கு
எவ்ளோ ரன் சார்
அடிக்கணும் ?"

--------------------------------------------------

"அன்பின் மார்க்கத்தையே
அத்தனை மதங்களும்
பின்பற்றச் சொன்னாலும்
இறைவன் பெயராலே
பிறகெதற்கு மனிதன்
கொன்று சாக வேண்டும் ?
உதவாத மதங்களும்
உலகில் ஏன் வேண்டும் ?"

"தான் என்ற ஆங்காரம்
தலைக்கு மேல் ஓங்கி
எதன் மேலும் பிடிப்பன்றி
எப்படியும் வாழ்வேன் என்றால்
தனையுணரா அற்ப மனிதன்
தட்டழிந்தேதான் போவான்.
கலி
இது
தீர்ப்பின் நாள்.
எது உன் நம்பிக்கை ?"

"ஒரு நூறு ரூபா
இருக்குமா சார் ?
அடுத்த வாரம்
தந்துடறேன்"

-----------------------------------------------

"அந்த
ஸ்த்ரீலோல சாமியார்தான்
உமக்கு இப்போ
சமயகுருவாமே ?
உண்டான் கடவுள்
உண்மையிலே உண்டுன்னா
கற்போடு ஒருவரைக்
கை காட்ட வேண்டியதுதானே ?"

"கட்சியில் இருந்துகிட்டு
நாத்திகம் பேசிட்டு
பகுத்தறிவு அது இதுன்னு
பூச்சாண்டி காட்டிட்டு
உங்க தலைவர்
விபூதி பூசினது
வெளியே தெரியாம
அதும் மேலேயே
பவுடர் போடுவாராமே ?"

"பாவம்
ஏதோ என்னால முடிஞ்சது
இத வச்சுக்கோங்க
..........................."

--------------------------------------------

"தங்கத்திலேயே இழைத்தாலும்
பசியடங்காத பூசாரிகள்
பகட்டுக் கோயில்கள்
விண்ணப்பப் படிவங்கள்
கடவுளரோடும்
லஞ்ச ஒப்பந்தங்கள்
பக்திக்கு
நிறைய பணம் செலவாகிறது.
வாசலில் பிச்சை எடுப்பவன்
வாரம் நூறு ரூபாய்
சேமிப்பானா ?"

"நாத்திகம் பேசுவது
மீசை மழிப்பதைப் போல்
நாகரீகம்
என்றாகி விட்டது.
கூட்டத்தோடு கோவிந்தா
கோவிந்தாவே பொய்யென்று.
சும்மா.
ஒரு அழகிற்காக
நாத்திகம் பூசிக் கொள்கிறீர்."

"சே
குழந்தை
என்ன அழகா
சிரிக்குது பாரேன் !"

---------------------------------------------------

"நல்லவர்க்கு நல்லதே நடக்கும்
என்றால்
நல்லவர் யார் முதலில் ?
சொர்க்கம் நரகம் எல்லாம்
செத்தபின் எனக்கெதற்கு ?
சித்திரகுப்தன் அலுவலகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா ?"

"ஊழ்வினை
உருத்து வரும்
பிறப்பு இறப்பு
ஏழு வரும்
இடையில் ஒரு கணம்
நிச்சயம் ஞானம் வரும்
உணர்வீர்.
அன்றெம்மை நினைவில் கொள்க"

"அட
நீங்க
இன்னுமா முடிக்கலை ?'

- மதி

((படம் அளித்து உதவிய ஆலன் லெவைனுக்கு நன்றி - Cogdogblog's photostream)

கருத்துகள்

  1. Good one. Fantastic presentation. Naran part is interesting.

    பதிலளிநீக்கு
  2. neega aathiganaa, naaththeeganaa, naranaaa, illa innum ethunnu mudivu edukkalaiyaa...... i hope u went for a long self research it reflected here... i enjoyed the line - "ஊழ்வினை
    உருத்து வரும்
    பிறப்பு இறப்பு
    ஏழு வரும்
    இடையில் ஒரு கணம்
    நிச்சயம் ஞானம் வரும்
    உணர்வீர்.
    அன்றெம்மை நினைவில் கொள்க"

    பதிலளிநீக்கு
  3. நன்றி அருண் .. @ நந்தா ... நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை .. கடவுள் விஷயத்தில் நான் அந்த நரன் தான். சில வேளைகளில் அவர் எனக்குத் தேவைப்படுகிறார்.. சில வேளைகளில் சந்தேகிக்க வைக்கிறார்.. மெய்ப் பொருள் என்பதும் நாம் கடவுள் என்பதும் ஒன்றல்ல என்பது என் கருத்து .. தற்சமயம் நான் இந்த விவாத வீதியிலே வேடிக்கை பார்த்து நின்றிருக்க மட்டுமே விரும்புகிறேன்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை அண்ணா... ரசித்த வரிகள்....
    """நல்லவர்க்கு நல்லதே நடக்கும்
    என்றால்
    நல்லவர் யார் முதலில் ?
    சொர்க்கம் நரகம் எல்லாம்
    செத்தபின் எனக்கெதற்கு ?
    சித்திரகுப்தன் அலுவலகம்
    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா ?""" :-)

    பதிலளிநீக்கு
  5. நரன் தான் நீர் என்று தெளிவாய் தெரிகிறது...
    "சே
    குழந்தை
    என்ன அழகா
    சிரிக்குது பாரேன் !"
    அருமையான படைப்பு.

    கடவுள் இல்லை என்பவன் எளிதில் சொல்லி விடலாம். இதை பல வருடங்களாய் கட்டி காத்து, கதைகள் சேர்த்து உரைத்து கொண்டிருக்கும் இந்த நாத்திகர்கள் தான் பாவம்.

    வாட்டெவெர், அருமைங்க... எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் எப்டி இப்டி னு... நாங்களும் இன்னும் முடிக்கல...

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஜோக்கர் ... உங்களுக்கென்ன நான் சொல்றது:-) நீங்க நிச்சயமா நல்லா வருவீங்க தம்பீ !!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாஜூன் 11, 2012

    மிக அருமையாக இருந்தது.நீங்கள் தேர்ந்த்தெடுக்கும் விஷயம் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது.உங்கள் படைப்புகளில் வெகுவாக யதார்த்தம் வெளிப்படுகிறது. முதல் வரிகளிலேயே அம்ர்க்களப்படுத்தியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
    நான் ரசித்தவை:
    "ஆதாரம் காட்டச் சொன்னால்
    அவதாரக் கதைகள் சொல்லி
    அதன் மேலும் பொய்கள் சொல்லி
    அழுத்தித் திணித்தல்லவா
    நம்பச் சொல்கிறீர் ?
    நீர் செய்வது
    மூளைச் சலவை "

    பதிலளிநீக்கு
  8. மிக நன்றி அனானிமஸ் ..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..