Jan 3, 2012

பெருநகரப் பறவைக்காட்டில் கோலோச்சும் காக்கைகள்
புறாக்கூண்டுகளிலும்
மனிதர்கள் புகுந்தேறிக் கொண்டபின்
நளினத்தின் சுவடுகளைத் தூக்கிக் கொண்டு
புறாக்கள் போய்விட்டன.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளும்
சொப்பனம் காணும் ஊர்க்குருவிகளும்
வண்டிவண்டியாய்த் தினம் வந்திறங்கியும்
வந்த வேகத்திலேயே தம்
அப்பாவித்தனங்களைத் தொலைத்துவிட்டு
அடையாளம் மாறிப் போகின்றன.

ராவெல்லாம் கண் விழித்து
ரசபோகங்களில் மூழ்கித் திளைக்கும்
ராக்கூவல் பண்பாட்டை
நாடெங்கும் பரப்பி வரும்
ஆந்தைகளின் கூட்டம்
இங்கின்னும் வரவில்லை.
பசி தீரக் கொன்ற போதும்
வலிமையின் போதையேறி
விளையாட்டாய் வேட்டையாடும்
பருந்துகளின் உக்கிரமும்
இங்கே ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.

எம் சென்னைப் பட்டணத்துப்
பெருநகரப் பறவைக்காட்டில்
ஒரே ஒரு புள்ளினம் தான்
வானெங்கும் வியாபித்திருக்கிறது.

காக்கைகள் !

நரியினோடு வடைக்கும்
நகரத்தினோடு வாழ்க்கைக்கும்
சதா காலமும் போட்டியிட்டுக் கொண்டு ,

மலிவு விலைக்குப் பிரியாணி ஆகிவிடாமல்
முன்னெச்சரிக்கையாய்த் திரிந்து கொண்டு ,

எளிமையாய்க் கூடு கட்டி, குடும்பம் சேர்த்து
ஏதேதோ கல்லைப் போட்டு நீர் குடித்து
ஏகாந்தக் கரைதல்களை இதனூடே எழுப்பியவாறே
பிழைத்துக் கொண்டும்
பறந்து கொண்டும்
புணர்ந்து கொண்டும்
பெருகிக் கொண்டும்
அனுபவப் பாத்தியதையில் இந்தக்
காட்டையே கட்டியாண்டு வருகின்றன.

மாகாணம் முழுதுமுள்ள
மற்ற மைனாக்களும் குருவிகளும்
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து
முடிந்தால் அவற்றைப்
பொறியியலும் படிக்க வைத்து
இங்குதான் விட்டுச் செல்கின்றன.

காக்கைகளோடு காக்கையாய்
அவைகளும் வளர்கின்றன.

 - மதி

(காக்கைகளின் படம் அளித்து உதவிய திருமதி எனில் அவர்களுக்கு நன்றி)

14 comments:

Ragunathan said...

nice one da .... எனக்கு பிடித்த வரிகள் "மலிவு விலைக்குப் பிரியாணி ஆகிவிடாமல்
முன்னெச்சரிக்கையாய்த் திரிந்து கொண்டு "...
செல் போன் டவரின் கதிர்வீச்சால் குருவிகள் குறைந்து வரும் விஷயத்தை சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன் ;)

Philosophy Prabhakaran said...

Lucky birds...

மதி (GS) said...

@ரகு .. நன்றி . இந்தக் குருவி மேட்டர் எனக்கே இப்போ நீ சொல்லித் தான் தெரியும் :-)

@ பிரபாகரன் .. உலகமே Angry birds விளையாடிட்டிருக்கு. நம்ம ஊர்ல இருக்கிற Lucky birdsகு நீங்க தான் பட்டம் குடுத்திருக்கீங்க :-)

sasikala said...

எம் சென்னைப் பட்டணத்துப்
பெருநகரப் பறவைக்காட்டில்
ஒரே ஒரு புள்ளினம் தான்
வானெங்கும் வியாபித்திருக்கிறது.

காக்கைகள் !
உண்மைதான் அருமை

மதி (GS) said...

நன்றி சசிகலா .. என் பதிவுகளில் முதல் முறையாக மறுமொழி பதிகிறீர்கள். நன்றி

Rajathinks_U said...

Arumaiyana Pathivu!!!

மதி (GS) said...

Thanks Raja

SHIVA said...

மாகாணம் முழுதுமுள்ள
மற்ற மைனாக்களும் குருவிகளும்
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து
முடிந்தால் அவற்றைப்
பொறியியலும் படிக்க வைத்து
இங்குதான் விட்டுச் செல்கின்றன.

மிகவும் அருமை!!!! மிகவும் ரசித்தேன்.

மொத்தத்தையும் திரும்ப திரும்ப படித்தாலும் சலிக்கவில்லை!!!!
செம :)

சென்னை பித்தன் said...

காங்க்ரீட் காட்டில் பறவைகள் நிலை பற்றி அழகான கவிதையாக்கி விட்டீர்கள்.நன்று.

மதி (GS) said...

நன்றி சிவா

மதி (GS) said...

சென்னைப் பித்தன் அவர்களே .. முதல் முறையாக உங்கள் கருத்துகளை என் பதிவில் பார்க்கிறேன். மகிழ்ச்சி .. நன்றி

Anonymous said...

பசி தீரக் கொன்ற போதும்
வலிமையின் போதையேறி
விளையாட்டாய் வேட்டையாடும்
பருந்துகளின் உக்கிரமும்
இங்கே ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.

எதார்த்தத்தின் தத்ரூபம்....
கவிதை நடையை மிகவும் ரசித்தேன்.

மொத்தத்தில் அருமை.

Joker said...

GS:

காலையில் கடற்கரை ஜாகிங்.
கண்திறந்து எங்கெங்கு காணினும்
காக்கைகள்.

அதை வைத்து ஒரு கவிதை எனக்கு
அன்றோன்றும் எழுதிட தோன்றவில்லை.

பின்னர் இதை படித்தேனே.
உம் எழுத்தோடு காதலில் விழுந்தேனே!!!

மதி (GS) said...

@anonymous and Joker .. thanks both :-)

Post a Comment