Oct 25, 2011

பண்டிகைப் புன்னகைகள்


எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ... இந்தப் பண்டிகைக்கு மட்டுமே வாய்க்கப்பெறும் சில பொக்கிஷமான புன்னகை நிமிடங்களைக் கவிதையாக்கி வைத்திருக்கிறேன்... வாசித்து ரசித்துவிட்டு மகிழ்வோடு கொண்டாடுங்கள் ..நாலோரம் மஞ்சளிட்ட புதுத்துணி
நாவூறும் சுவையிழுக்கும் பலகாரம்
நல்லெண்ணெய்க் குளியலை யார்
நடுவில் கண்டுபிடித்தாரோ என்று
செல்லச் சிறுவன் சிணுங்கும்போது ........

தவழும் பாவாடையைத் தூக்கி ஒரு கை
துணையாய் அண்ணன் விரல்பிடித்து இறுக்கி ஒரு கை
காதைப் பொத்திக் கொள்ள கைகள் பற்றாமல்
வைத்த முதல் வெடி வெடிக்குமுன்னே
குட்டி தேவதை கண் சுருக்கி ஓடி வர ...

Oct 12, 2011

ஒரு சோறு பதம்

அரசாங்க வேலைன்னா சும்மாவா !!
கீழைத் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் வகையறா ஊர்களுள் , அதிகம் பசுமை பழகாத , வெயிலும் புழுதியும் புழுக்கமும் பரந்த ஒரு ஊரில் அதிகம் சுவாரசியம் இல்லாத ஓர் அரசாங்க அலுவலகத்தில் சுத்தமாகச் சந்தை மதிப்பே இல்லாத ஒரு வயசானவர் எப்போதும் போல ஒரு நாளைக் கழித்ததில் பெரிய விசேஷம் இல்லை. என்றாவது ஒரு நாள் என்ற ரீதியில் என் போன்றோர் அங்கே இருக்கையில் அவரும் அங்கே இருந்தது தான் இந்தக் கதை உருவாவதற்குப் பெரும் பங்காற்றியிருக்க வேண்டும்.

கொஞ்சம் பழக்கமான ஓர் ஆசிரிய நண்பருடன் - புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர் - ஒரு வேலையாக அந்த ஊரின் உதவித்தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒரு முழு நாளைக் கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனக்கும் பெரிதாக வேறு வேலை ஏதும் அன்று இல்லை என்பது வேறு விஷயம்.

தாருக்கும் தரைக்கும் வேற்றுமை தெரியாத ஒரு குறுகிய தெருவில், ஒரு பழைய பெரிய திரையரங்கத்தினை ஒட்டிய ஒரு மிகக் குறுகிய சந்துக்குள்ளே அமைந்திருந்தது அலுவலகம். காலை ஒன்பதரை மணிக்கே வந்து விட்டிருந்தோம். எங்களுக்குப் பிறகு சீரான இடைவெளியில் பதவி அடிப்படையில் அலுவலக ஊழியர்கள் வரத் தொடங்கினார்கள். ஒரு பத்தரை வாக்கில் கொஞ்சம் தடபுடலோடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அம்மா கடைசியாக வந்து சேர்ந்தார். கொஞ்சம் அதிகமான முகப் பூச்சுகளும் கட்டையான அதிகாரக் குரலுமாக உஷா உதூப்புக்கும் 'தூள்' சொர்ணாக்காவுக்கும் சொந்தம் போல இருந்தார் அலுவலரம்மா. அதே 'ஒரு ரூபாய்' பொட்டும் கூட.

அலுவலகக் கட்டடம் ஒரு காலத்தில் அந்தத் திரையரங்கத்தின் அலுவலகமாக இருந்திருக்க வேண்டும். கட்டடத்தின் மேலே ஓரிரு எழுத்துகளை இழந்து 'அன்னை மேரி' என்ற திரையரங்கின் பெயர் இருந்தது. அன்னை மேரி திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த படம் அந்த அரங்கத்தின் நொடித்துப் போன நிலையைக் காட்டியது. அரசாங்கத்தின் தொடக்கக் கல்வி நொடித்துப் போனதா இல்லையா என்பது அரசியல் விஷயம். பேச வேண்டாம்.

அங்கே காத்திருக்கும் போது தான் அந்தப் பெரியவர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததுமே எழுத்தர் ஒருவர் "ஐயா உங்க விஷயத்தைத்தான் தேடிக்கிருக்கோம். ஆயிரும். கொஞ்ச வெளியே காத்திருங்க" என்றார். பழக்கமான ஆள் தான் போல. கொஞ்சம் ஒடிசலாகவும் குள்ளமாகவும் இருந்தார். மழுங்கச் சிரைத்த முகம். கையில் ஒரு மஞ்சப்பை. அவரும் எங்களோடு காத்திருக்கத் தொடங்கினார். வெளியில் இருந்த வேறு சிலருக்கும் அவர் பழக்கமாகத் தெரிந்தார். அவர்களிடம் அவர்களுடைய வேலை விஷயங்களையும் முன்னேற்ற நிலைகளையும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

.....................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...
- மதி