பூனையே போ போ


என் அடுக்களைக் குப்பைத்தொட்டி என்றால்
அந்தப் பூனைக்கு அவ்வளவு பிரியம்
அந்தப் பூனை என்றால்
எனக்கு அவ்வளவு கடுப்பு.

ஒரு ராத்திரி தவறாமல்
கவிழ்த்துக் கிளறி
களரி பயின்று போகிறது
அதிலும்
கறி தின்ற நாளெல்லாம்
குறி வைத்துப் பாய்கிறது.

என்றாவது ஒரு நாள்
ஒரு கால்
கொஞ்சம் வால் எனக்
கண்ணில் பட்டுவிட்டால்
அன்றைய பொழுதெல்லாம்
பின் பூனையின் நினைப்புதான்.
காதலிக்கையில்தான் கடைசியாக
இப்படி உணர்ந்திருக்கிறேன்.




இந்தத் தொல்லை
அடுக்களையோடு போய்விடுமோ
அடுத்த அறைக்கு நீண்டால் என்
ஆசை மீன் தொட்டியும்
போய்விடுமோ? எனப் பயந்தே
சில இரவுகளில்
தூக்கம் வருவதில்லை.
தவறாமல் அவ்விரவுகளிலும்
பூனைதான் வருகிறது.

வெறுப்பாய் விரட்டிவிட்டுச் சில சமயம்
வெளியே போ நாயே எனும்பொழுது
சட்டென்று முரண் உறைத்துச்
சின்னதாய் அசடு வழியும்
அப்பொழுது யோசிப்பேன்,
வெள்ளைக்காரன்
எந்தக் கடுப்பில் இதற்கு
ஆங்கிலத்தில் பெயர் வைத்தானோ என்று.

சரி
குப்பையில் ஒரு நாள்
விஷத்தை வைத்துவிடலாம் என்றால்
ஜீவகாருண்யம்
கொஞ்சம் தடுக்கிறது.
செத்துப் போன பூனைக்குச்
சித்தப்பன் பெரியப்பன் எதுவும்
பழிக்குப் பழி வாங்க
பின்னால் தூக்கத்தில் பிறாண்டுமோ என்று
பயமும் இடிக்கிறது.

காற்றோட்டமாய் வீடு பிடித்துவிட்டு
சன்னல்களை அடைத்துவைத்துத் தூங்குவது
அசட்டுத்தனமாய் இருந்தாலும்
நான்
வாடகை கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன்.
குடும்பம் குட்டியோடு
அது வசதியாய்ப் புழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

- மதி

கருத்துகள்

  1. பெயரில்லாஜூலை 10, 2011

    ஒரு ராத்திரி தவறாமல்
    கவிழ்த்துக் கிளறி
    களரி பயின்று போகிறது
    அதிலும்
    கறி தின்ற நாளெல்லாம்
    குறி வைத்துப் பாய்கிறது...
    Naan rasitha varigal...

    நான்
    வாடகை கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன்.
    குடும்பம் குட்டியோடு
    அது வசதியாய்ப் புழங்கிக் கொண்டுதான் இருக்கிறது...

    Nonthalin azhagaana velipaadu...

    பதிலளிநீக்கு
  2. 'veliya poda naayey', endru poonayai paathu [naaigalukku naamum, sarithramum seidha kodumai .. yevanai, yedhai thittuvadhendraalum, namakku 'naai' dhaan! ]
    'jeevakarunyam konjam thadukiradhu'
    'sithappan, periyappan'
    'kaatrattomaana veetirkku, vaadagai .. '
    pondra varigal miga rasikka thakkavayaaga irundhana ..

    unarchi poorvamaana kavidhai - veedum, poonayum kannil nirkkindrana!

    பதிலளிநீக்கு
  3. மதி அவர்களே... நல்ல கவிதை.. நவீன விருட்சத்தில் பூனை தொடர்பாக நிறைய கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் நீங்கள் முதலில் பிரசுரித்த பின் கூட உங்கள் வலைப்பூவில் பிரசுரித்திருக்கலாம். எனது கவிதைக்கு நீங்கள் எழுதிய கருத்து மூலமாக எனக்கு இன்னொரு பூனையைப் படிக்க முடிந்தது. மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நன்றி நீலகண்டன் ! பூனையைப் பற்றிய வேறு பார்வையில் உங்கள் கவிதையையும் மிக ரசித்தேன் ... நவீன விருட்சத்தில் என் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்புகிறேன்.. எப்படி அணுகுவது ?

    பதிலளிநீக்கு
  5. நவீன விருட்சத்தில் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்... அங்கே உங்கள் படைப்புக்கள் அனுப்புவதற்கான முகவரி இருக்கிறது. உடனே அனுப்புங்கள்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..