Jul 29, 2011

கவிதை படிக்கும் பூனை


கவிதையை வாசித்துவிட்டு இதையும் பாருங்கள் நான்
கவிதைகள் சமைத்து வைப்பேன்.
ஒரு பூனை போல்
பதுங்கி வந்து யாரோ
சந்தடியின்றிச் சுவைத்துவிட்டு
சுவடுகளை விட்டுப் போகிறார்.
மீண்டும் மீண்டும்
அதே பூனை.
சுவடுகளால் நல்ல பரீட்சயம்
முகம் பெயர்
மற்றெல்லாம் சூட்சுமம்.
விடை காண ஒரு சின்ன வேட்கை
விசாரணையே இந்த வேடிக்கை!

Jul 16, 2011

பரணி


"நீதானே சங்கரன்?"

"ஆம். நீங்கள் யார்?"

"ம், இன்று உன் பிறந்தநாள் அல்லவா? இருபத்தேழாம் பிறந்தநாள்?"

"ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"வாழ்த்துக்கள்"

"நன்றி , ஆனால்......"

"சரி . வா என் கூட "

நான் மலங்க மலங்க விழிக்கிறேன். யாரோடு பேசிக்கொண்டிருக்கிறேன்? உருவமே புலப்படவில்லை. வெறும் குரல்தான் கேட்கிறது. என்னதான் நடக்கிறது. என் வலதுபக்கத்தில் ஒரு நான்கடி தூரத்திலிருந்து மீண்டும் குரல் வருகிறது.

"வா போகலாம். ஏற்கெனவே தாமதமாகிவிட்டது.." ஒன்றும் புரியவில்லை. வலப்புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். நடக்க நடக்க வெளிச்சம் மங்கிக் கொண்டே வந்தது. கண்மூடித் திறந்ததுபோல் இருந்தது. இங்கே நிற்கிறேன். நான் கண்களைத் திறந்திருக்கிறேனா என்றே சந்தேகமாய்த்தான் இருக்கிறது. சூழவும் இருள். என் முகத்துக்கு நேராக கைகளை அசைத்துப் பார்க்கிறேன். அது கூடத் தெரியாத மூர்க்கமான இருள். என்னைக் கூட்டி வந்த குரலையும் காணவில்லை.

ஒரு புது மனிதர் என்னை நோக்கி நடந்து வருகிறார். அவரைச் சுற்றிலும் மட்டும் ஆளைக் காட்டுமளவு கொஞ்சம்போல வெளிச்சம் இருக்கிறது. என்னருகில் வந்து புன்னகைத்துவிட்டு, "வா வா சங்கரா ! பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஏன் சும்மா நிற்கிறாய்? போய்ச் சுற்றிப்பார். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. சின்ன வேலைதான். சீக்கிரம் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் இருளில் மறைந்துவிட்டார்.

சுற்றிப்பார்க்கவா? என் கால் கட்டை விரலையே என்னால் பார்க்க முடியவில்லையே , இங்கே சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது. என் பிறந்தநாளுக்குவாழ்த்துச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் யாரென்றே தெரியவில்லை. எத்தனை நேரம் தான் ஒரே இடத்தில் நின்றிருப்பது? குத்துமதிப்பாய் காற்றைத் துழாவி நடக்க ஆரம்பிக்கிறேன். இப்போது என் முன் ஆங்காங்கே ஒளிக் கீற்றுகள் தென்படுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவை அந்த இடத்தைத் தொட்டுத் தொட்டுக் காட்டினாலும் இன்னும் இந்த இடத்தின் நீள அகலம் அறியமுடியாதபடி எல்லைகள் தெரியாதபடி இருளே பிரதானித்திருக்கிறது. நான் ஒளி வந்த திசையில் துழாவ ஆரம்பிக்கிறேன்.

கிட்டப் போய்ப் பார்த்தால் அதே ஆள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். எதிரே மேசையின் மேல் சில காகிதங்கள். வெள்ளை வேட்டியும் ஒரு ஊதா நிறச் சட்டையும் உடுத்தியிருந்தார். கறுப்பாக ஒரு மூக்குக்கண்ணாடி. ஏதோ எழுதிக்கொண்டிருந்தவர் என்னை நிமிர்ந்து பார்த்து, "கொஞ்சம் பொறு தம்பி. சொன்னேனே சீக்கிரம் வருகிறேனென்று, கொஞ்சம் அப்படியே உலாத்திவிட்டு வா. தெளிவடைவாய்" என்றார்.

நானும் குழம்பியபடியே வேறொரு ஒளித்திசை நோக்கிப் போனேன். ஒரு அழகான இளம்பெண் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள். அந்தக் கால அரசகுமாரி போல உடையணிந்திருக்கிறாள். மேலும் குழப்பமே அடைந்தேன். இது என்ன இடம்? சுற்றிலும் கண்களைச் சுழலவிட்டேன். இப்போது இன்னும் பல இடங்களில் ஒளி தெரிகிறது. இன்னும் அதிக தூரங்களில் மனிதர்கள் தெரிகிறார்கள். ஆனால் ஒவ்வொரு இடமும் வேறு சாயல் கொண்டு வேறுபட்ட உருவங்களைக் கொண்டு தெரிகிறது. எதையும் ஒரு கோர்வையில் கொண்டு வர முடியவில்லை. அந்த இருண்ட பிரதேசம் ஒரு புதிராகத் தோன்றுகிறது.

......................................................இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...- மதி

Jul 10, 2011

பூனையே போ போ


என் அடுக்களைக் குப்பைத்தொட்டி என்றால்
அந்தப் பூனைக்கு அவ்வளவு பிரியம்
அந்தப் பூனை என்றால்
எனக்கு அவ்வளவு கடுப்பு.

ஒரு ராத்திரி தவறாமல்
கவிழ்த்துக் கிளறி
களரி பயின்று போகிறது
அதிலும்
கறி தின்ற நாளெல்லாம்
குறி வைத்துப் பாய்கிறது.

என்றாவது ஒரு நாள்
ஒரு கால்
கொஞ்சம் வால் எனக்
கண்ணில் பட்டுவிட்டால்
அன்றைய பொழுதெல்லாம்
பின் பூனையின் நினைப்புதான்.
காதலிக்கையில்தான் கடைசியாக
இப்படி உணர்ந்திருக்கிறேன்.