கல்யாணம் பண்ணாமல் வீடொன்றைத் தேடிப்பார்



பிரம்மச்சரியம் பூண்ட
பரதேசித் துறவிகள்
பரம்பொருள் தேடி
நிரந்தரம் அலைவர்.

சென்னை சிட்டிலப்பாக்கத்தில்
சின்னதாய் ஒரு வீடு வேண்டி
பேச்சிலராய் நானலைந்தேன்.

கலியாணங்கட்டாதவன்
கடவுளே கிடைக்குமென்று
தைரியமாய்த் தேடுகிறான்.
கழுதை
ஒரு வீட்டுக்கு இத்தனை
வீம்பிருக்கும் என நான்
கனவிலும் எண்ணவில்லை.




வாடகை முன்பணம்
வண்டி நிறுத்த ஓரிடம்
படுக்கையறை குளியலறை
தண்ணீர் மின்சாரம்
ஆணி அடிக்கும் சமாசாரம்
விமானம் நிலா ஃபிகர்
மூன்றும் நோக்க மொட்டை மாடி
இவ்வளவும் பேசவேண்டும்
எனப் பட்டியலிட்டு நான் போவேன்.

முதல் கேள்விக்கு
பேச்சிலன் என்றதும்
அதற்கு மேல்
பேச்சே இல்லையென்று
புறங்கழுத்தில்
கதவடைப்பார்கள்.

வியர்த்து அலைந்து
விவரம் சேர்த்து
ஐந்து வீடுகள்
காலியாய்க் கிடந்த
தெருவொன்றைக் கண்டுபிடித்தேன்.

அதே நம்பிக்கை
அதே கேள்வி
அதே பதில்
அதே கழுத்து.
கதவுகள் மட்டும் மாறின !

கழுத்து வலிக்கையில்தான்
கண்டுகொண்டேன்.

அந்தத் தெருவில்
.............

பள்ளிக்கூடப் பெண்கள்
பையைத் தூக்கிகொண்டு
டியூசன் போயினர்.
பருவப் பெண்கள் சிலர்
மொட்டை மாடிகளில்
கூந்தல் கோதினர்.
பேரிளம் பெண்கள் பலர்
பருவத்துக்குப் பேன் பார்த்துக்கொண்டும்
முற்றத்தில் வாய் பார்த்துக்கொண்டும்
வீட்டிற்குள் நாடகம் பார்த்துக்கொண்டும்
இருந்தனர்.
வாக்கப்பட்டு வந்த
வயதேறின ஆண்மக்கள் சிலர்
என் கழுத்தில் கதவடைக்கையில்
கண்ணில் பட்டிருந்தனர்.

சந்தேகம் வலுத்துப் போய்
மீண்டும் ஒருமுறை பார்த்து வந்தேன்.

எனக்கு இல்லை என்றான
ஓரிரு வீடுகளின் வெளிச்சுவரில்
பிள்ளையார்
படமாகவோ சிலையாகவோ இருந்தார்.
பேச்சிலர் என்பதால்
பாவம்
அவரையும் வீட்டில் ஏற்றவில்லை போல !

தேனீர்க்கடைகளிலோ
தெருவோரங்களிலோ
கூட்டமாகவோ தனியாகவோ
பைக்கிலோ சைக்கிளிலோ
மருந்திற்கும் ஆங்கோர்
ஆண்மகன்
வாலிபன்
அகப்படவில்லை.

................................

இந்தத் தெருவில்
ஆண் குழந்தை பிறந்தால்
கள்ளிப்பால் கொடுத்துக்
கொன்று விடுவார்கள் போல !

பிறகெங்கே
பேச்சிலனுக்கு வீடு ?

உங்களுக்குத் தெரிந்த
பேச்சிலி யாரேனும்
வீடு தேடிக்கொண்டிருந்தால் சொல்லுங்கள்
இந்தத் தெருவில்
ஐந்து வீடுகள்
காலியாய் இருக்கின்றன.

- மதி


கருத்துகள்

  1. பெயரில்லாஏப்ரல் 24, 2011

    ///இந்தத் தெருவில்
    ஆண் குழந்தை பிறந்தால்
    கள்ளிப்பால் கொடுத்துக்
    கொன்று விடுவார்கள் போல !///

    பேச்சிலராய் இருப்பது அவ்வளவு பெரிய பாவமா?

    நன்றாக இருக்கிறது பாஸ் கவிதை

    பதிலளிநீக்கு
  2. பிரம்மம் தீண்டிய பொழுதுகளை மட்டும் அல்ல
    கஷ்டம் தீண்டிய பொழுதுகளையும் மிக
    அழகாக ரசிக்கும்படியாக சொல்லிப்போகிறீர்கள்
    கரு கஷ்டம் குறித்ததாயினும்
    பதிவு மனம் கவர்வதாய் இருக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. @கந்தசாமி .. எனக்கே பேச்சிலரா இருப்பது இவ்வளவு பெரிய பாவம்னு இப்போதான் தோணுது பாஸ் ...

    @ரமணி .. நன்றி சார் ... கடைசியாக ஒரு நல்லவர் எனக்கு வீடு கொடுத்துவிட்டார். அந்த வீட்டிலிருந்துதான் இந்தக் கவிதையை எழுதுகிறேன். கடந்து வந்த பின் கஷ்டம் சிரிப்பூட்டத்தான் செய்கிறது !

    பதிலளிநீக்கு
  4. un feelings puriyudu :)
    but now, all is well i guess?

    பதிலளிநீக்கு
  5. "ஓரிரு வீடுகளின் வெளிச்சுவரில்
    பிள்ளையார்
    படமாகவோ சிலையாகவோ இருந்தார்.
    பேச்சிலர் என்பதால்
    பாவம்
    அவரையும் வீட்டில் ஏற்றவில்லை போல"

    Nice !!!!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாமே 16, 2011

    Ullathin kumuralkalin sirantha velipaadu!!

    பதிலளிநீக்கு
  7. //இந்தத் தெருவில்
    ஆண் குழந்தை பிறந்தால்
    கள்ளிப்பால் கொடுத்துக்
    கொன்று விடுவார்கள் போல //

    very nice :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..