Apr 30, 2011

மூணுகண்ணன்


இரண்டு நாட்களுக்குத் தேவையான துணிமணி, ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு சமீபத்திய குமுதம், அப்புறம் ஓரமாக சுஜாதாவின் 'கணேஷ் வசந்த்', இவை அனைத்தும் பையினுள்ளே. பை அவன் தோளின் மேலே. தனக்குள் நினைத்துக் கொண்டான், "பத்து மணி நேரம். ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள ஒழுங்கா முடிச்சிரணும்".

(அவன் ஒரு சாதாரண பிரயாணி)

கடிகாரம் இரவு பதினொன்று என்கிறது. மாநகரப் பேருந்து நிலைய நுழைவாயிலிலிருந்து ஐம்பது அடி தூரத்தில் தெருவில் நிற்கிறான். அந்தத் தெரு இன்னும் ஒரு நானூறு அடியில் அமைதியாக வளைகிறது. அவன் முதுகுக்குப் பின்னால் தெரியும் வெளிச்சமும் பரபரப்பும் முழுசாக முக்காலே மூணு வீதம் கூட அவன் முன்னால் இல்லை. சந்தடியற்ற சாலை வளைவு.

தேனீர்க்கடை வாசலில் ஒரு முறை சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டு கேட்கிறான், "தம்பி டீ ஒண்ணு எவ்வளவு?"

"மூணு ரூவா சார்"

"ஒரு டீ"

(அவன் ஒரு குடிகாரன். ஆனால் கோப்பையில் தேனீரை மட்டும்தான் நிரப்புவான்)


எதிரே அமைதியான வளைவில் நான்கு காலடிச் சத்தங்கள். இரண்டு பேர் அவனை நோக்கி ஓடி வருகிறார்கள் - மூச்சிரைக்க. ஒருவன் ஓடுகிறான். கண்ணில் பயம். ஒருவன் துரத்துகிறான். கண்ணில் குரோதம்.

டொக்.

"சார் டீ"

கையில் எடுத்து ஒரு முறை ஊதிவிட்டுக் கொஞ்சம் உறிஞ்சுகிறான். சூடு அவனின் தொண்டை வழியாக உணவுக்குழாய் முழுவதும் எழுப்பி விடுகிறது. பிறகு மெல்ல மீதி தேனீரை ஆற்றிக் கொண்டிருக்கிறான்.

அவர்கள் அவனருகில் - வெகு அருகில். சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளி ஒருவனின் கத்தியில் பளபளத்தது. அத்தனை பகையும் தீரும் ஒரே வெட்டு. - கழுத்தில். முடிந்து போனது. மூன்று இரத்தத் துளிகள் தெறித்துப் பறந்து அவனின் தேனீரில் விழுந்து மெல்லக் கரைகின்றன.

அவன் அது கரைவதைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு கோப்பையை ஒரு முறை நன்றாக ஆட்டி மீதமிருக்கும் தேனீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு மூன்று ரூபாய் எண்ணி வைக்கிறான்.

(அவன் கொஞ்சம் வித்தியாசமானவன்)

Apr 24, 2011

கல்யாணம் பண்ணாமல் வீடொன்றைத் தேடிப்பார்பிரம்மச்சரியம் பூண்ட
பரதேசித் துறவிகள்
பரம்பொருள் தேடி
நிரந்தரம் அலைவர்.

சென்னை சிட்டிலப்பாக்கத்தில்
சின்னதாய் ஒரு வீடு வேண்டி
பேச்சிலராய் நானலைந்தேன்.

கலியாணங்கட்டாதவன்
கடவுளே கிடைக்குமென்று
தைரியமாய்த் தேடுகிறான்.
கழுதை
ஒரு வீட்டுக்கு இத்தனை
வீம்பிருக்கும் என நான்
கனவிலும் எண்ணவில்லை.