முற்றுப்புள்ளிகளாலானதொரு வாக்கியம்




பௌர்ணமி முழு நிலவின் மெல்லிய ஒளிக் கீற்றுகள் அந்த ராப்போழ்தில் எனக்குப் பாதையெது பள்ளமெது எனப் பகுத்துக் காட்டிப் பயணிக்கத் துணை வருகின்றன. முகமற்று அடர்ந்து சூழ்கின்ற பனி என் தோல், சதை, எலும்பு, மஜ்ஜையெல்லாம் ஊடுருவிக் குளிர் காய்கிறது. இன்னும் எவ்வளவு தூரமோ? எங்கு போவேனோ? யாமறியேன் பராபரமே. பாதை பள்ளம் காட்டிய சந்திரன் எனக்கோர் பாவையையும் காட்டி அவள் வனப்பையும் காட்டி எனை இழுத்துச் செல்கிறான். அவள் போகும்வரை நானும் போவேன்.

ஒற்றை வாலிபன். அழகிய வாலிபி. சலனமோ சந்தேகமோ, அவளும் அடிக்கொருதரம் திரும்பித் திரும்புகிறாள். அவள் மிகச் சிறந்த பின்னழகி என்று தெரிகிறது. முகம் காண வேண்டாமா? என் கால்கள் ஓடினவோ , அவள் கால்கள் தேங்கினவோ ...... கை தொடும் தூரம் ! கை தொட்டேன் . அலறுவாள் என் நினைத்தேன். அழைத்தாள் !

கண்ணோடு கண் பார்த்தேன். தென்னங்கள்ளில் தோய்த்தெடுத்த விழிகள். முழுமதி அவள் மெய்யெழில் காட்டுகிறது. அவையவை அங்கங்கு அப்படி அப்படி அமையப் பெற்றவள். கையோடு கை கோத்து , தன்னோடு எனைச் சேர்த்து, இதழோடு இதழ் வைக்கிறாள். நான் நா வறண்டு, விழி செருகி, சிரம் கிறங்கி, உயிர் உருகி ......... நிற்க ! அய்யோ , இது இன்பமாகவல்லவா இருக்கவேண்டும் ? !

உண்மையிலே உயிர் உருகி வடியுதே. வாயோடு வாய் வைத்து என் ஆவி உறிஞ்சுகிறாள். இராட்சசி ! மோகினி ! பிணந்தின்னி ! ......... நிறுத்தடி ! போதும் எனக்கு வலிக்.......கிறது.

உயிர் பிரிந்தது.

சுபம்.

..........................................................................................................................................

மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்தான். சபாஷ் ! ஒரு பெரிய எழுத்தாளனின் "டச்" தெரிகிறது. நம்பர் போட்டுத் தேதி குறித்துக் கொண்டான். இதோடு சேர்த்து 2743 வகைகளாகத் தன் மரணத்தை எழுதி விட்டான். மூவாயிரம் தொட்டுவிட்டால் மூன்றாம் பாகம் தயார். ஆனால் பாவம் ... உலகம் - அவன் தாய் உட்பட - அவனைக் கிறுக்கன் என்கிறது.

...............................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...




- மதி

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..