மாயக்கண்ணாடி

வாழ்வின் பருவங்களைப் பகுத்துப் படைத்துப் பரிசோதித்த ஒரு கவிதை முயற்சி.... ஒவ்வொரு பருவமும் ஐந்து வரிகளில் கவிதையாகவும் அதைத் தொடர்ந்து விளக்கமாகவும்...


பிறப்பு


அரவங்கள்* அற்றுப் போன
ஓர் அழகிய துறையின் கரையில்
புனலாட்டங்கள்* புரியாது சாய்ந்திருக்க
புணையொன்று* துணை வரும்
பற்றுக. 

(அரவம் - ஒலி ; புனல் - நீர்; புணை - படகு)


உலகியல் வாழ்வின் சத்தங்கள் சச்சரவுகள் அண்ட இயலாத ஓர் பிரதேசத்தில் - தாயின் கருவறையில் - அந்த நதிக்கரையினில் வாழ்வென்னும் நீச்சல் தெரியாது ஓர் உயிர் வீற்றிருக்க , உடல் என்னும் படகு உன்னை நதியைக் கடக்கக் கை கொடுக்கும் . பற்றிக்கொண்டால் பிறந்திடுவாய். 




சிறுபிள்ளைத்தனம்







சுற்றித் தேயும் சக்கரம்
பற்றிப் போயும் பற்றியே போயும்
பயணம் மட்டும் அடி ஒன்றே அடைந்திருக்கும்
கடந்தது கடலென்பாய்
கடுகு. 







சிறுவனாய் வாழ்க்கையில் காலத்தின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து ஓடலாம். சுற்றிக் கொண்டே இருக்கும் காலச் சக்கரத்தைப் பற்றி ஓடி மூச்சு வாங்க ஒதுங்கி நின்றால் ஒரு கடலைக் கடந்தது போல இருக்கும். அப்போது தெரியாது , இன்னும் கடலில் காலைக் கூட நனைக்கவில்லை என்று!




கோபம்




வேள்வித்தீ முன் வீற்றிருப்போன்
ஆநெய்* ஊற்றி அனலினை ஏற்றீ
செங்குருதி சூடாகி
செங்குருதி சூடாக்கி
எரித்து எரிவான். 

(ஆநெய் - பசுநெய்)






வாலிபத்தில் மீசை முளைக்கும் பிராயம். கொண்ட குணம் கோபம் ஒன்றே. சுற்றி நிகழும் சம்பவங்கள் எல்லாம் உன் முன்னால் எரியும் வேள்வித்தீக்கு நெய் ஊற்றும். கோபம் கொள்வாய். கொள்ள வைப்பாய். கோபம் ஒரு தொற்று நோய் போல. 



பிறழ்ச்சி


சுண்ணத்தில்* நகை செய்து
பொன்வண்ணம்* பெரிதென்பான்
பரத்தை போதையேறி
பெண்வண்ணம் பிரம்மமென்பான்
பொருளெல்லாம் பரம்பொருளாகா. 

(சுண்ணம் - சுண்ணாம்பு ; பொன்வண்ணம் - பொன்னைப் போல)

தான் பார்ப்பதே நிஜம். தான் செய்வதே சரி. சுண்ணாம்பில் செய்த நகை தங்கமாய்த் தெரியும். காணும் கன்னியரெல்லாம் கைப்பற்றத் தோன்றும். எது நிஜம்? எது நகல்? தெளிவான குழப்பம்!



காதல்


நங்கையவள் நகையினிலே
நான்கும் பிறழ்ந்து போவான்
வெப்பத்தில் பொசுங்கியபின்
கதிரவனே கடவுளென்பான்
பற்றினான்


உலகமே ஒரு பெண்ணில் தெரியும். ஒரு பெண்ணே உலகமாய்த் தெரியும். அவள் சிரித்தால் இவன் தொலைந்திடுவான். காதலின் ஆழங்களை மூச்சடக்கிக் கண்டபின்னர் காதலே கடவுளென்பான். அனுபவித்தவன் அறிவான். 


முடிச்சுகள்


குட்டிகள் கண்ட ஏறு*
பிழைக்கவே ஓடும்
ஓடும் பிணையுமாங்கே*
பிழைப்பையே தேடும்
பிழையன்று

(ஏறு - ஆண் சிங்கம் ; பிணை - பெண் மான்)

வேட்டையாடும் சிங்கம் குட்டிகளுக்கும் சேர்த்துக் கொல்லும். ஓடும் மானுக்கோ இரவு வரை உயிரோடிருந்தால் மட்டுமே குட்டிகளின் பார்வை. குட்டிகளின் பசிக்கும் சேர்த்து ஓட வேண்டும். அதுபோல் சொந்தங்கள் பொறுப்புகள் சேரச் சேர , காதலன் கணவனாய் தகப்பனாய் அரிதாரம் பூசுவான். இது பிழையல்ல. வாழ்வின் நியதி. 



தேடல்



மெய்* மேலோர் மோகம் துளிர்த்து
மெய்* மேலோர் யாகம் வளர்த்து
மெய்யான மெய்யறிய
மெய்வருத்தி
மாய்வான்
( மெய் - இறை ; மெய் - உடல்)



மெய்த்தேடல் துவங்கும். இருக்கும் கடவுளின் இருப்பிடம் தேடி ஓடத் துவங்குவான். காதோரம் நரைக்கும். கண்டுபிடிப்பதில் உறுதியோடே இருப்பான். வயதானாலும் , கால்கள் ஓடத் தயாராகவே இருக்கும்.



முதுமை



நீந்திக் களைத்த மீன்
முட்டையைத் தேடும்
முட்டை தரையிலுமில்லை
தண்ணீரிலுமில்லை
தெரிந்தும் தேடும்




வாழ்ந்து களைத்த காலத்தில் பேரப்பிள்ளை கைபிடித்து நடக்கையில் பேரனாய் மாற ஓர் ஆசை எழும். மீண்டும் பின்னோக்கி வாழ , தாயின் கருவறை அமைதியைக் கேட்க , எண்ணம் ஏங்கும். நடக்காதென்று தெரிந்தும் எண்ணிப் பார்த்தே சாபல்யமடைவான். 


மரணம்


தெப்பத்தில்* துளை விழும்
பாழும் விழி அழும்
பாரா விழி எழும்
புலன்கள்
புணை நீங்கச் சொல்லும்

(தெப்பம் - படகு ; புணை - படகு)


உடல் வலுவிழக்கும். மெல்ல மெல்ல மரணம் பக்கமாகும். ஒரு மாற்றத்துக்காக அதை மனமும் விரும்பும். சுற்றங்கள் கலங்கினாலும் சுயம் திடமாய் தெளிவாய் இருக்கும். சம்பவிப்பது சாவெனத் தெரிந்தும் சந்தோஷமே மிகும். 




புதிர்

புள்ளினங்கள்* புள்ளி வைக்கும்
குத்திக் குத்திக் கோடிழுக்கும்
ஓடி ஓடி ஒட்ட வைக்கும்
பறந்தால்தான் படம் தெரியும்
பறக்கையிலே படம் புரியும்

(புள்ளினங்கள் - பறவையினங்கள்)


மரணம் நிகழ்ந்து விட்டது. சரி , அதற்குப் பின்? மரித்துப் பார்த்தால்தானே தெரியும். முடிந்தால் ஒருமுறை மரணித்துவிட்டுச் சொல்கிறேன். இப்போதைக்கு என்னால் விளக்க இயலாது. 

- மதி

கருத்துகள்

  1. Simply GS
    sema lines,
    romba naalaiku appuram sutha thamizh la padikiren
    "thedal" paguthi =>vaarthai illai
    arumai na,ithe maathiri innum ezhuthunga

    பதிலளிநீக்கு
  2. Thanks da siva... this is one poem that i wrote 5 years back. It still is one of my personal favourites ... Glad my other friends are also liking this :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..