Oct 18, 2010

சுழியம் - என் பாராட்டுகளும் கருத்து விமரிசனமும்

என் கல்லூரி GCTயில் இவ்வாண்டு என் இளைய நண்பர்கள் இதழாக்கி வெளியிட்டிருக்கும் பருவ இதழ் - சுழியம். மூன்று ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாய் கல்லூரித் தமிழ் மன்றத்தில் தூவப்பட்ட யோசனை இது. இப்போது நடந்தேறியிருப்பதில் பெருமை அடைகிறேன். தபாலில் ஒன்றுக்கு ரெண்டாக வந்து சேர்ந்த இந்த இதழ் குறித்த என் கண்ணோட்டம் இங்கே.

சுழியம் என்ற பெயர்க்காரணம் : கணிதத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு சுழியம் , அல்லது பூஜியம், அல்லது கொஞ்சம் கலீஜாக முட்டை! கணிதப் பேரணியிலேயே அதிக அர்த்தங்கள் பேசக்கூடிய அற்புதமான எண் இந்த சுழியம். ஒரு நீண்ட பயணத்தின் தொடக்கமாய் வரும் இந்த இதழ் பக்கங்களைத் தாண்டிப் பலவும் பேச விழைந்த ஆவலில் சுழியம் என்று பெயர் தாங்கி வருகிறது. நல்ல பெயர். வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு: பின் வரும் இதழ்களும் சுழியம் என்ற பெயரிலேதான் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்புறம் இதை படித்து விட்டு யாரும் அடுத்த இதழுக்கு ஏன் 'ஒண்ணு' என்று பெயர் வைக்கவில்லை என்று கேள்வி கேட்க வேண்டாம் !

முதல்வர், ஆலோசகர், முன்னாள் செயலாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் எழுதியதெல்லாம் இருக்கிறது. என்னை ஈர்த்தவை மானவர் படைப்புகள் தான். அவை பற்றியே இங்கே அதிகம் பேசுகிறேன். பாராடுகளோடும் விமரிசனங்களோடும்.

கவிதைகள் :-
சூப்பரப்பு: 'தேய்ந்து போன ரேகை' என்ற தலைப்பில் கீர்த்தனா, சுபாஷினி, ரேவதி என்ற மூவரின் கவிதைகள். நல்ல தலைப்பு. கீர்த்தனா உழவனின் வியர்வை அருவியை அழகாக உவமையாக்கியிருக்கிறாள். வெடித்த நிலத்தில் விழும் அந்த முதல் மழைத் துளியின் கவித்துவம் உழுபவனின் வலியோடு சேர்ந்து வெளிவந்திருக்கிறது. உயர்ந்த வர்க்கம் உயரும் வர்க்கத்தின் துயரம் துடைத்தே ரேகைகள் தேய்க்க வேண்டும் என்ற சுபாஷினியின் ஆசை அதிகம் உவமிக்காமல், உண்மைகளைக் கொண்டு இரு உலகங்களைக் காட்டுகிறது. கருத்த இவெளிப்படுத்தியதில் நல்ல தெளிவு. ரேவதியின் தமிழ் நடை வித்தியாசம். உழைப்பவன் காணும் பிள்ளைக் கனா பற்றின கவிதை. வாழ்த்துகள்.

'குருடனுக்குள் பௌர்ணமி'- வீரமணியின் கவிதை. பார்வை வரும்போது காணத் துடிக்கும் உலகைக் காகிதத்தில் வடித்து, இப்படியொரு உலகத்தில் பார்வை உண்டென்றால் தா, இல்லாவிடில் நீயே வைத்துக்கொள் உன் பார்வையை என்று இறைவனிடம் முறையிடும் விழிப்புணர்வுக் குருடன். நல்ல கருத்து. நல்ல வார்த்தைப் பிரயோகம். நல்லா வருவீங்க தம்பி. தொடர்ந்து வேற வேற சுவைகளில் எழுதிப் பாருங்க.

'கந்தையில்தான் ஓட்டை சிந்தையில் இல்லை' - தலைப்பிற்கு ஒரு தனிப் பாராட்டு. சட்டென்று கவனம் ஈர்த்தது. வார்த்தைப் பிரயோகமும் சந்தமும் நன்று.

'(ஏ)மாற்றம்' - இரகுபதியின் கவிதை படிப்பதற்கு முன்னமேயே எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது. ஏமாற்றவில்லை. கொஞ்சூண்டு மழை கேட்டவனை, வறண்டோ வாரிக்கொட்டியோ வாட்டியெடுக்கும் வாழ்வின் முரண்பாடுகளை மிகத் தத்ரூபமாக விவரித்திருக்கிறார். சொல்லாட்சியும், கருத்துத் தெளிவும் நன்று.

கொஞ்சம் இதையும் பாத்துக்கோங்க: ரேவதியின் முயற்சி புரிந்தாலும் , தனி வழி அமைத்து நடக்க முயலும் நடை, தெளிவில்லாமல் சில சமயம் தடுக்குகிறது. ஒரு தொடர்ச்சியும், உச்சரிப்பின் சத்த சேர்க்கைகளும் கொஞ்சம் தட்டி நெளித்து நிமிர்த்தினால், இந்தப் பெண் இன்னும் நல்ல கவிதைகளைப் படைக்க முடியும். இராம்குமார் கொஞ்சம் நிறைய வெவ்வேறு தலைப்புகளையும் எழுத்தாளர்களையும் வாசித்தால், நல்ல வித்தியாசமான கருத்துகள் ஊற்றெடுக்கும். இருக்கும் சொல் திறனை கருத்தில் புதுசாய் வைத்துப் படைத்தால் இன்னும் ருசிக்கும்.
பொதுவாக எல்லாருக்கும்  சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. அது கடைசியில்.


குட்டிக்கதை:- பலியாடு:
சூப்பரப்பு: ரூபிணி, கீதா, ராஜபிருந்தா - மூவரின் படைப்புகள். சிசுக்கொலை, முதியோர் இல்லம், குழந்தைத் தொழிலாளி - மூன்று பொருத்தமான களங்கள். ராஜபிருந்தாவின் கதை ஒரு ஹைக்கூ போல 'நச்'. ரூபிணீயின் கருவறை உருவகம் நன்று. கீதாவின் கதை கொஞ்சம் பழகின சுவை என்றாலும் தெளிவான நடை. நல்ல முயற்சிகள்.

பாரதியின் ஒருவரிக் கதை - இந்த இதழில் என்னை மிகவும் கவர்ந்த படைப்புகளில் ஒன்று. நல்ல முயற்சி. நல்ல வித்தியாசமான யோசனை. விஷயம் பழகினதென்றாலும் படைப்பில் புதுசாக்கி ஈர்த்த கதை. இவ்வளவு நீளமான வரி எழுதும் கஷ்டம் எனக்கு நன்றாகப் புரியும். இந்த முயற்சி, எனக்குத் தெரிந்த சில மொழிகளில் தமிழில் மட்டும் தான் சாத்தியம். அந்த வகையில் இந்தக் கதை ஒரு தமிழ்த் தனித்தன்மை வெளிப்பாடாகவும் அமைந்து விட்டது.

இதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க: கதைகளில் உயிரோட்டத்தை முடிவு செய்வது நடை தான். யார் சொல்வதாகக் கதை வரும், எப்படி ஆரம்பிப்பது, முடிப்பது, ஒரு திருப்பம், கொஞ்சம் நகைச்சுவை, புது கோணங்கள், உரையாடல்கள் - இவையெல்லாம் ரொம்ப முக்கியம். வாக்கியங்களைத் தாண்டி வாசர்களோடு பேசும் கதைகள் இவற்றில் சிலவாவது பெற்றிருக்கும். கதை எழுதுவதைத் தொடரும் உத்தேசம் இருக்குமானால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கண்ணோட்டத்தில் முயலுங்கள். உங்களுக்கான் தனித்தன்மை உங்களுக்கே தெரிய வரும். முயல் குட்டிகளாய் வாசித்துக் கருத்து சொல்ல ஒரு கூட்டத்தையும் தயார் செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்திலேயே அற்புதமாய்க் கதை எழுத எந்தக் கொம்பனாலும் முடியாது. முயற்சிப்பவனுக்குக் கொம்பு முளைக்கும் !

கட்டுரைகள்:-
சூப்பரப்பு:
ரகுநாத் - காகிதக் கனவுகள் - சமீபத்தில் நான் வாசித்தவைகளிலேயே மிகச் சிறந்த ஆரம்பம் இந்தக் கட்டுரைக்கிருந்தது. "என்றோ எங்கோ நீ உனக்குள் தொலைத்த பெண்மைதான் உன் மனைவி. என்றோ எங்கோ நீ உனக்குள் தொலைத்த ஆண்மைதான் உன் கணவன்" - யோசித்து ரசிக்க வைத்த வரிகள். இதழ் முழுமைக்கும் எடுத்துக்கொண்ட விஷயத்தில் வித்தியாசப்பட்டு நின்றது இந்தக் கட்டுரைதான்.

சுபாஷினி - நிழல் காண் மண்டிலம் - நான் ரொம்பவும் ரசித்த கட்டுரை. நல்ல தேர்ந்தெடுத்த வரிகள். நல்ல சிந்தனை. அதிலும் கண்ணாடியைப் பற்றி ஒரு பெண்ணின் பார்வை ரொம்பப் பொருத்தமாக இருந்தது. சங்கப் பாடல்களைத் தெளிந்த பொருளோடு கொடுத்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்.

இதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க: ரகு எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்த கூர்மை எழுத்தில் லேசாக மழுங்கிவிட்டிருக்கிறது. உரைநடையில் ஒரு தொடர்ச்சி ரொம்ப முக்கியம். செல்வராகவன் 'ஆயிரத்தில் ஒருவன்' எடுத்த மாதிரி ஆகிவிட்டது கட்டுரை. ஆனால், புதுசாக யோசிக்கும் எவனும் எழுதும் வித்தை எளிதாய்க் கற்றுக்கொள்ளலாம். அதுவே உன் பலம்!

மற்றவை:-
சூப்பரப்பு:-
எண் விளையாட்டி புதுசு. பெயர் பொருத்தமாக இருந்தது. குறுக்கெழுத்து இன்னும் முயற்சிக்கவில்லை. சீக்கிரம் சொல்கிறேன். முகம்மது சாகிப் , உனக்கு ஒரு பெரிய நன்றி தம்பி. இந்தப் பட்டியலை நான் பல நாளாய்த் தேடிக் கொண்டிருந்தேன். அப்படியே இதில் புரியாத பல கலைகளுக்கும் விளக்கம் குடுத்தால் உனக்கு ஒரு தனி விருந்து கண்டிப்பாகத் தருவேன். கடைசிப் பக்கத்து ஓவியங்கள் எல்லாம் அருமை. தமிழ் பருவ இதழில் கேப்டன் ஜேக் குருவியை வரைந்து விட்டு நம் சொந்தக் கேப்டன் விஜயகாந்த்தை வரையாதமைக்குச் சில அரசியல் கண்டனங்கள் வரலாம். அது கிடக்கட்டும். அட்டகாசமாய் வரைந்திருக்கிறீர்கள் அனிதா, சரண்யா, கற்பகவள்ளி. கொஞ்சம் கறுனை செய்து நான் சங்கமத்திற்கு வரும்போது என்ன வரைந்து கொடுத்தால் display picture போட்டு சந்தோஷப்பட்டுக்கொள்வேன். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், வரைந்த அனைவரும் பெண்கள். என்று தணியுமோ இந்த கோழிக்கிறுக்கல் சாபம் ஆண் வர்க்கத்திற்கு ?!!! GCT மொக்கை போடுவதில் உலகளாவிய பெருமை பெற்றது என்பதை இடைச்செருகல்கள் உணர்த்தின. அந்த இட்லி மொக்கை ரொம்ப ருசி. பிரசன்ன வெங்கடேஷின் நாட்காட்டி யோசனை புதுசு.

இதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க:
ஆனால் அந்த நாட்காட்டியை என்னால் தெளிவாகப் பயன்படுத்த முடியவில்லை. விளக்கங்களில் குழப்பங்கள் இருந்தது. என் போன்ற தத்திகளுக்கும் புரியும்படி இனி முயற்சிக்கவும்.


பொதுவாக சொல்ல வேண்டிய சில கருத்துகள் :

குறைந்தபட்சம் 50 எழுத்துப்பிழை , சந்திப்பிழை , ஒற்றுப்பிழை கண்டேன். proof readingஇல் அதிகக் கவனம் தேவை.

சாதாரணமாக ஒரு வளரும் எழுத்தாளனை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து "ஒரு ஐந்து நிமிடம் கோபப்படு" என்று சொன்னால் அவன் உடனே எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் - சிசுக்கொலை, குழந்தைத்தொழிலாளி, ஈழம், உழவன் இதர இதர. அதே மாதிரி "ஒரு ஐந்து நிமிடம் சந்தோஷப்படு" என்றால் உடனே அப்துல் கலாம், அதிகாலைக் குளிர், மழை, நிலா, காதல், வானவில் இதர இதர. இவற்றின் சிறப்பில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் அரைத்த மாவு சுவை தான் இப்போது. ஒரு எழுத்தாளன் தனக்குரிய சிறப்பைப் பெற எழுத்தில் செலுத்தும் கவனத்தைவிட எடுக்கும் விஷயத்தில் அதிக கவனம் தேவை. யோசிக்கவும்!

கடைசியாக :


இந்த மன்றக் குழுவின் தமிழறிவும் ஆர்வமும் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது. இலக்கணம் விவாதிக்கிறீர்கள். யாப்பு பழகுகிறீர்கள். எங்களையெல்லம் விட முன்னேறி எங்கோ போய் விட்டீர்கள். சத்தியமாக உங்களுக்குத் தெரிந்த இலக்கணம் எனக்கெல்லம் தெரிந்த்தில்லை. அதற்கு ஒரு சலாம். வாழ்த்துகள். இனி நீங்கள் வாசிக்கும் விஷயங்கள் தான் ரொம்ப முக்கியம். வெவ்வேறு எழுத்தாளர்களை வாசியுங்கள் (தேய்ந்த ரிக்கார்டு மாதிரி இதைத் திரும்பத் திரும்ப எல்லா மன்றக் குழுவிடமும் சொல்வது என்னிடம் உள்ள ஒரு சிறு கெட்ட பழக்கம். மன்னிக்கவும் :-) ) . மரபுத் தமிழில் மரண கெத்தாக இருக்கும் நீங்கள் உங்கள் கற்பனைக் களங்களை எவ்வளவு முடியுமோ விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மொழியின் ஆளுமையும் நீட்சியும் தொடர்ந்து புதுசாய்ப் பிறப்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு புதுப் பிறப்பும் பழமையின் சிறப்போடு கூடக் கொஞ்சம் அழகாக வேண்டும். பழைய சிறப்பிற்காக இளைய சமுதாயம் 1982இன் உலக அழகியை இப்போது காதலிக்க முடியாது. தமிழை இன்றைய தலைமுறையைக் காதலிக்க வைக்க வேண்டும். அதுவே நம் கொள்கையாக இருக்க வேண்டும்.

வாழ்த்துக்களுடன்
கோமதி சங்கர்