Jul 5, 2010

#4 - காதல் மரத்தில் நீலச்சாயம்

(நான்காண்டுகள் கோவையில் கல்லூரியில் கழித்த பொன்னான நாட்களில் சந்தித்த சுவாரசியங்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம். இதே போல கல்லூரிச் சாலை # என்று குறியிட்டு இன்னும் பல கதைகள் ஒவ்வொன்றாய் வரும். இந்தப் பதிவு இத்தொடரின் நான்காவது கதை ஆகும். இந்தத் தொடரின் மற்ற கல்லூரிக் கதைகளை வாசிக்க கல்லூரிச் சாலை என்ற சுட்டியைத் தட்டிப் பாருங்கள். 

என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும், யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்.

சந்தோஷமாய் என் கல்லூரிக்குள் வாருங்கள்.....)

......................................................................................................கல்லூரியின் அழகிய சாலைகளில் ஒன்றான பெண்கள் விடுதிச் சாலையில் விடுதி அலுவலகத்தை ஒட்டி நிற்கும் அந்த மரம். வேம்பா புளியா அரசா தெரியாது. எங்களுக்கு அது காதல் மரம். அதற்கு மேல் தெரிந்துகொள்ளத் தோன்றவில்லை. அந்தச் சாலையில் ஆண் வாசனை அனுமதிக்கப் படும் கடைசிப் புள்ளியில் முளைத்து எழுந்து கிளைத்துக் குலுங்கும் எங்கள் காதல் மரம். சாவித்ரி சரோஜா தேவி காலத்திலிருந்தே , தன் நிழலில் கருப்பு வெள்ளை தொடங்கி ஈஸ்ட்மென் கலர் வழியாக நவீன யுகம் வரை பல வண்ணங்களில் காதல் கதைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இடம். அங்கு ஒரு நீலச் சாயம் வெளுத்துப் போய் வெளியே வந்த கதை தான் இது. 

வள்ளியும் ஷர்மிளாவும் அன்று மதியம் போல கோதையாறு விடுதியிலிருந்து தங்கள் சைக்கிள்களை முன் கூடை குலுங்க மிதித்து வந்து மரத்தடியில் நிறுத்தினார்கள். வள்ளி மெஸ்ஸுக்குப் பணம் கட்ட அலுவலகத்துக்குப் போனாள். ஷர்மிளா அங்கேயே நின்று கொண்டாள். ஐந்து நிமிஷம் கழித்து வள்ளி திரும்பி வந்த போது ஷர்மி மரத்தின் பின்னால் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாற்போல் இருந்தது. இவள் குரல் கேட்டதும் ஏதோ காகிதத்தை மறைத்துப் புத்தகத்தில் வைத்துத் திரும்பி வந்தாள். 

திரும்ப மிதித்து வந்த மூன்று நிமிஷங்களும் வள்ளி அது என்னவென்று கேட்கலாமா வேண்டாமா என்று யோசனையிலேயே வந்தாள். சில நாட்களாகவே ஷர்மிளா வித்தியாசமாக நடந்து கொள்வதாக அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டாள். 

வள்ளியும் ஷர்மிளாவும் அலீஷாவோடு ஒரு அறையில் இருந்தார்கள். மறு நாள் காலை ஷர்மிளா அறையில் கடைசியாகக் கண் விழித்தாள். ஏதோ அன்று வித்தியாசமாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அத்தனை கண்களும் அவள் மேல் படிவதாக ஒரு பிரமை. அமைதியாகக் கூந்தல் செதுக்கிச் சோம்பல் முறித்து எழுகிறாள். 

"என்ன ஷர்மிளா, ராத்திரி ரொம்ப நேரமா திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் படிச்சிட்டிருந்தே போல , தூக்கமே இல்லையா .." கொஞ்சம் எள்ளலாய் வள்ளி கேட்டாள். ஷர்மிளா ஒன்றும் புரியாமல் எழுந்து நடந்தாள். வாயில் பசை வைத்து அவள் நிமிர்கையில் குளித்துவிட்டு அலீஷா அறைக்குள் நுழைகிறாள். வள்ளி இப்போது அலீஷாவைப் பார்த்து , " ஏ அலீஷா , நம்ம ஷர்மி இப்போ பயங்கரமாப் படிக்கிறாடீ. சீக்கிரமா உங்கிட்ட குர்-ஆன் கத்துக்குடுக்கச் சொல்லுவா பாரு. உனக்குக் குர்-ஆன் வாசிக்கத் தெரியுமில்ல " என்றாள். 

மெதுமெதுவாக ஷர்மிளாவுக்கு நிலவரம் உறைக்கிறது. வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாகத் தன் மேசை மேல் வைத்திருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கிறாள். முழுவதுமாக உண்மை புரிகிறது. கொஞ்சம் கோபமாக வள்ளியைப் பார்த்து, " என் லெட்டரை எடுத்துப் படிச்சிருக்கே வள்ளீ " என்கிறாள். வள்ளியும் கொஞ்சம் விறைப்பாக மாறுகிறாள். அலீஷா அப்பாவியாக வேடிக்கை பார்க்கிறாள்.

"ஏன் வள்ளி , உனக்கு வெட்கமா இல்லே?"
"ஏ ஷர்மி , நீ தான் வெட்கப் படணும். இத்தனை நாள் கூடவே இருந்திட்டு நீயே இப்படி எவனோ பின்னாடி.."
"..நிறுத்து வள்ளி.."
"...ஏ போடீ , பெரிய தெய்வக் காதல் ஜோடி. திருட்டுத்தனமா .. எங்ககிட்ட கூட சொல்லாம... மரத்துல லெட்டர் வெச்சு எடுக்கிறீங்களோ ... அதுவும் உனக்குப் போயும் போயும் சையது தானா கெடைச்சான் .. அவனுக்காக எங்களை அசிங்கப் படுத்திட்டியேடீ.."
"லெட்டரை எங்க வெச்சிருக்கே " , கோபத்தில் விம்மி வரும் விழி நீரைத் துடைத்து ஷர்மிளா புடைக்கிறாள். 
"இந்தா , பண்றதே திருட்டுத்தனம். இதுல பிளாக் அண்டு ஒயிட் ஸ்டைல் வேற.."

அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஷர்மிளா வேகமாக வெளியேறிவிட்டாள். இனி என்ன நடக்கும் என்று அவளுக்குத் தெரியும். இத்தனை நாள் அவர்களோடு தானே இருந்தாள். 

........................................................இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...


- மதி