Nov 28, 2009

முதல் போணி


அணுஅணுவாக அழகழகாக ஆசைஆசையாக முறுக்கி முறுக்கி வளர்த்த மீசையைஒரு நள்ளிரவின் உந்துதலில் மழித்துப் பார்த்த அனுபவம் உண்டா உங்களுக்கு ? ஒரு பக்கத்து மீசையில் கத்தியைத் தொட்டாற்போல் வைத்திருந்து ஒரு சில நொடிகள் கூர்ந்து யோசித்த பிறகு கத்தியின் கூர்மைக்கு வேலை கொடுப்போம். இப்படி மீசை மழிக்கும் எல்லா ஆண்மக்களும் - பெண்கள் வேறு மாதிரியாக மீசை மழிப்பதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - ஒரு புற மீசையை இழந்த மறுகணம் 'தப்பான முடிவெடுத்து விட்டோமோ ?' என்று கண்ணாடியில் ஆழ்ந்தாழ்ந்து போவர். ஆனால் வேறு வழியின்றி மேற்கொண்டு மழித்துவிட்டு , மறு நாள் வெளியே வரும்போது, "ஐயையோ ! அழகா இருந்த மீசையை இப்படி அநியாயமா எடுத்திட்டீங்களே" கேட்கும்போது ஒரு சஞ்சலம் வரும்.

    இதே போலத்தான் சமீபத்தில் என் மரியாதைக்காகவும், மீசைக்காகவும், கெத்துக்காகவும், உயிருக்காகவும் (?!) சென்னை வடபழனியிலிருந்து கிண்டி வரை ஒரு கற்பனை மீசை மழிப்பு நிகழ்த்தினேன்.

    அதிகாலை 4 30 மணிக்கு கனவற்றுத் தூங்கின என்னைத் தட்டி எழுப்பி இடத்தைக் காலி பண்ணச் சொல்லி இறக்கி விட்டார் நடத்துனர். நான் கோயம்பேடு மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பையைச் சுமந்து கொண்டு, தமிழறியாத என் நண்பனையும் சுமந்து கொண்டு கிண்டிக்கு வண்டி மாறக் காத்திருக்க ஆரம்பித்தேன். கொட்டாவிகளையும் கொசுக்களையும் துரத்திக் கொண்டே காத்திருக்கையில் சட்டெனத் தூக்கம் கலைத்துக் கிச்சுகிச்சு மூட்டினான் நண்பன் - நடைமேடை அறிவிப்புப் பலகையில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த 'கிண்டி'யை அவன் உச்சரிக்கவும் எனக்குச் சிரிப்பு வந்தது. வேறு யாரும் கேட்டிருந்தால் அவனுக்கு அந்த இடத்திலேயே இரத்தம் கூட வந்திருக்கலாம். யோசித்துப் பார்த்தேன். அவன் மேல் தப்பில்லை. சிரித்துக் கொண்டேன்.

    நடைமேடைகளில் பலத்த கூட்டம். நண்பன் பாரிமுனையில் உற்றார் வீட்டுக்குச் செல்ல வேண்டும். 15B வந்ததும் கைகாட்டிக் கிளம்பினான். நான் கூட்டத்தோடும் தனிமையோடும் ஒரே நேரத்தில் அதிக நேரம் காக்க வேண்டி வந்தது. வந்த ஒரு வண்டியில் கிட்டத்தட்ட கிண்டியின் ஜனத்தொகையில் ஒரு சதவீத மக்கள் முட்டி மோதி ஏறினர். என் பையில் சுமை அதிகம். காத்திருந்தேன்.

    ஆட்டோ பிடிக்கலாமா என்று ஒரு எண்ணம். மறு கணம் வங்கிக் கையிருப்பு மனதில் தோன்றித் தடுத்து விட்டது. என் மனம் ஒரு குட்டிக் கணக்கு போட்டது. கிண்டியின் ஜனத்தொகையில் தொண்ணூற்றைந்து சதவீதம் இப்போது கிண்டியிலேயே தூங்கிக் கொண்டிருக்கும். ஒரு சதவீதம் எழும்பூரில் காத்திருக்கும் . ஒரு சதவீதம் மீனம்பாக்கத்திலும் மற்றொன்று பூங்கா நகரிலும் காத்திருக்கும். ஒரு சதவீதம் போன வண்டியில் போய் விட்டது. இன்னும் ஒரே ஒரு வண்டியையும் விட்டுப் பிடித்தால் அடுத்த வண்டியில் ராஜாவாட்டம் உட்கார்ந்து போகலாம் !

    அடுத்த இரண்டு வண்டிகள் கடந்து போனதும் சின்ன வயசில் கணக்கு டீச்சர் என் கணக்கில் தீயை வைக்கச் சொன்ன காரணம் பிடிபட்டது !

    அரைமணிக்குமேல் ஆகிவிட்டது. வடபழனி வரை செல்லும் ஒரு பேருந்து ஒரு சில காலி இருக்கைகளோடு வந்தது. கணப்பொழுது தாமதித்தாலும் தவறிவிடக் கூடிய வாய்ப்பு ! முருகன் மேல் பாரத்தைப் போட்டுத் தாவியேறி விட்டேன். வழியில் அடுத்த சிந்தனை. வடபழனியிலிருந்து என்ன செய்வது ?
 ................................................இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...- மதி

Nov 10, 2009

ஏன் நான் உனக்குப் பிறகு பிறந்தேன்

நிலவினைக் கலந்து பேசி
முக வடிவம் முழுமை செய்து
கதிரொளியைப் பிரதிபலிக்கும்
வித்தைகள் அதற்குப் புகட்டினான் .

கண்ணழகை வடிவமைக்க
தூக்கம் கெட்டு யோசித்து
ஆழமும் ஈர்ப்பும் சரிவரப் பொருந்த
சிலபல மின்னல் கீற்றுகளைத்
திரட்டியோர் உருண்டை செய்து
அதற்குக் குறும்பும் பேச்சும்
கற்றுக்கொடுத்தான்.

குரலின் சிறப்பிற்காய்த்
தேடித்தேடித் தேர்ந்தெடுத்து
ஒவ்வொரு மலரிலும்
ஒரு துளி தேனெடுத்து
குழைத்துக் குழைத்துக்
குரல் வார்த்தான்.

அறிவும் திமிரும்
அளந்து கலந்து
மழலையும் ரசனையும்
சேர்த்துத் தெளித்து
அகத்தழகும் பூர்த்தி செய்தான்.

புன்னகையில் மட்டும்தான்
ஏதோ இடிக்குதென்று
இராப்பகலாய் அலைக்கழிந்து
என்னவென்று கண்டுகொண்டான்
மூக்கில் கொஞ்சம்
கூர்மை குறைத்தான்.

பிரம்மனே இப்படி
பிரம்மப்பிரயத்தனப்பட்டுப் படைத்த
பெண்ணடி நீ !

எல்லாம் ஆனதும்
வேலை முடிந்ததென்று
திருப்தியாய்த் தலைசாய்க்கையில்தான்
இப்பேற்பட்ட பெண்ணொருத்தி
பேரழகி
இவளுக்குத் துணை ஆக
ஈடான இணையாக
ஓர் ஆணும் உலகில் இல்லையென
உணர்ந்தான் பிரம்மன் .

ஆதலால்
மேலும் மூன்று மாதங்கள்
மெனக்கெட்டு உழைத்து
என்னைப் படைத்தான் !