Apr 27, 2009

புறத்திணை புதிது


மத்தியானப் பாடவேளை
பிரபஞ்சத்தின் தோற்றம்
வகுப்பில் நகர்ந்து கொண்டிருக்கும்
கருத்தாகக் கவனிக்க வேண்டும் என்று
ஈரத்துணியால்
கண்ணைத் துடைத்துவிட்டு நிமிர்வது
வெட்சி 


பிரபஞ்சம் 
தோன்றினால் என்ன
தொலைந்து போனால் என்ன
பாழாய்ப் போன உறக்கம் அறியுமா
படைப்பின் ரகசியம் ?
சற்று முன்னர்தான்
பிரித்து மேய்ந்திட்ட
பல வீட்டு சமையலும்
கரத்தோடு கரம் கோத்து
கண்ணைச் சுருட்டும் அது
கரந்தை


வகுப்பு போனால் போகட்டும்
வீடு இல்லையா
சொந்தமாக மூளை இல்லையா
அந்தக் கல்விப் புயல்
அன்றிரவே கரையைக் கடக்கும் என
அந்த அப்பாவிப் பயல்
வைராக்கியமாக முடிவெடுப்பான்
வஞ்சி


சிந்தனை வா வா என்னும்
புத்தகம் போ போ என்னும்
சென்னையை நோக்கி வரும் புயல்
கடைசி நேரத்தில்
ஆந்திராவைத் தாக்கிச் செல்வது போல
புயலெல்லாம் வெறும்
புஸ்வாணமாய்ப் போகும்
அது காஞ்சி


தேர்வுக்கு முதல் நாள்
தேறும் அளவாவது
தேற்ற வேண்டுமே 
புத்தகம்
பூட்டிய அறை
புத்துணர்ச்சிக்குத் தேனீர்
படை திரட்டிப் போய்
பாடத்தை முற்றுகை இடுவது
உழிஞை


ஒன்றுமே தெரியாதே என்று
பயம் பயமாய் வரும்
புத்தகத்தைத் திறந்தால் எல்லாமே
புதுசு புதுசாய்த் தெரியும்
வெறுத்துப் போய்
புத்தகத்தை மூடிவிட்டால்
பயமெல்லாம் பறந்து போய் விடும்
நொந்து போய்த் தூங்கப் போவது
நொச்சி ஆகும்


தேர்வறை
அபாயச்சங்கு
போர்முரசு
ச்சே
அது பரீட்சை மணி
போர் துவங்கும்
ஒரு காகிதத்துக்கு எதிராக
ஒரு தரப்பு மட்டும்
பலத்த சேதங்கள் அடையும்
அங்கே
அதிர்ந்து போய்ப் பொருவது
தும்பை


வசவு வந்து சேருமோ
வடக்கிருக்க நேருமோ
இல்லை 
வெற்றி விகிதம் தேறுமோ
கடித்து கடித்து
நகமெல்லாம் 
காணாமல் போனபின்
கணிணி சொல்லும்
வாகை சூடிவிட்டதாய்


தவப்புதல்வன் தன்
அருமை பெருமைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய் அடுக்கி
அலசி ஆராய்ந்து
அந்த வீரத்தாய்
அங்கலாய்ப்பாள் அது
பாடாண்


இவை எதிலும் சேராத
பொதுவான செய்திகள்
பிரார்த்தனை பயம்
அரட்டை ஆட்டம்
ஏச்சு பேச்சு
இதர இதர
எல்லாம் 
பொதுவியல் கீழ் பொருந்துவனவாம்


கைக்கிளை பெருந்திணை எல்லாம்
பதினெட்டு தாண்டியதும்
தானாகச் சேர்ந்து கொள்ளும்


தோண்டித் துருவிப் பார்த்தால்
ஒரு வித்தியாசம் பிடிபடும்
இங்கே 
திணைக்கு ஒரு பூ இல்லை
மொத்தமாக ஒன்றே ஒன்றுதான்
காதில் !

Apr 24, 2009

THE ALCHEMIST- பாலோ சீலோ என்னுள் ஏற்படுத்தின தாக்கங்கள்


சில இரவுகளுக்கு முன் நான் எழுதிய கவிதை ......

உறங்காமலும் விழிக்காமலும்
இருக்கின்ற பொழுதுகளில்தான்
மெய் தரிசனம்
சில மின்னல் கீற்றுகளாய்
வந்து போகிறது

அந்த இரவின் அனுபவங்கள் - நான் மெய் தரிசனம் என்று கூறியவை - தந்த உணர்வு நன்றாக நினைவிருக்கிறது. சிற்சில ஒளிக் கீற்றுகளாய் உண்மைகளும் புரிதல்களும் வந்து அறிமுகமாகி விட்டுப் போகும். சில பேருண்மைகள் கூட ..........

அந்த உணர்வு எனக்குப் பரிச்சயமானதாகவே இருக்கிறது. ஆனால் எப்போதும் உடனிருப்பதில்லை ! பல சமயங்களில் எழுதும் போது உணர்வேன் . ஒரு சிலவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் தெரியும் - இது நான் எழுதியதல்ல , 'நான்' எழுதியதென்று ! இந்த மேற்கோள்களுக்குள் வீற்றிருக்கும் நான் ..... ஒரு தனிப்பட்ட அடையாள நிலை. கிட்டத்தட்ட அந்த மெய் தரிசனத்திலிருக்கும் புரிதலின் நிலை .

என்னால் பல தருணங்களில் எனக்கும் 'எனக்கும்' உள்ள வித்தியாசத்தை உணர முடிந்துள்ளது . 'நானாக' இருக்கையில் என் ஆன்மாவின் குரலைக் கேட்டிருக்கிறேன். அதுதான் ஆன்மாவா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் அது எனக்குள் இருக்கும் ஜீவனின் குரல் . இதை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறார்கள் . நான் 'நான்' என்கிறேன் .

அந்தக் குரலை இதயத்தின் குரல் என்று கூறும் ஒரு புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். பாவ்லோ சீலோ என்ற பிரேசிலியரின் THE ALCHEMIST என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். ஒரு வாலிபன் தான் கண்ட கனவைத் தேடிச் செல்வதும், செல்லும் வழியில் கற்றுக் கொள்பவையும் , உணர்ந்து கொள்பவையும் அடங்கிய நாவல் . Soul of the world , Universal language , The voice of the heart என்ற மூன்று விஷயங்கள் . ஒன்று போலவே தோன்றினாலும் ஒன்றல்ல ..... ஆனால் மூன்றும் ஒரு ஆதாரத்திலிருந்து கிளைத்தவை .


Soul of the world - உலகின் ஆன்மா என்று வைத்துக் கொள்வோம் ! அத்தனை உயிரிலும் ஊடாடிக் கலந்துள்ள ஆன்மா . உணர்ந்து முயற்சிக்கும் உயிர்களால் அடையாளம் காணப் படுகிறது . உயிர்கள் என்று வரைமுறை தாண்டி இயற்கை , காற்று . வெயில் , மணல் , தங்கம் , தகரம் , வார்த்தை , எண்ணம் என்று அத்தனைக்கும் உள்ள தனியான ஆன்மாக்களும் சங்கமிக்கும் பெருவெளி , இந்த உலகின் ஆன்மா !

இந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் விளங்கக்கூடிய பொதுவான உலகமொழி - Universal language ! வார்த்தைகள் தேவையில்லை ! வடிவங்கள் தேவையில்லை ! ஆன்மாக்களின் மொழி .... மனிதன் ஒரு அமைப்பை வடிவமைத்து அதற்கு மொழி எனப் பெயரிட்டதற்கு முன்பிருந்தே அறிந்த ஆதார மொழி ! பசியும் , காதலும் , அழுகையும் , கோபமும் அடிக்கடி நம்மை இந்த மொழிக்குப் பழக்கப்படுத்தும் விஷயங்கள். மொழி ஞானம் வளர வளர மழையும் நிலவும் இரவும் வானமும் பேசசுத்துணையாய் வருகின்றன !


அதில் நான் மேற்கோளிட்டுக் காட்டும் 'என்' குரல் - The voice of the heart - பழகிய மனங்களுக்குக் கேட்கிறது. நம்மை நமக்குக் காட்டும் , நம் கனவுகளைக் காட்டி அதை நோக்கி வழி நடத்தும் குரல் இந்தக் குரல் . எனக்குள் ஒன்றல்ல ...... இரண்டு குரல்கள் இருப்பதாக உணர்கிறேன் . மேலோட்டமான ஒரு குரல் வாயாடியாக அடிக்கடி பேசிக் கொண்டு , கேள்வி கேட்டுக்கொண்டு , பதில் சொல்லிக்கொண்டு என் இன்னொரு குரலாக இருக்கிறது . அதற்கும் கீழே உள்ளத்தின் ஆழத்தில் உலகின் ஆன்மா ஊடுருவும் இடத்தில் 'என்' குரல் இருக்கிறது . அது அடிக்கடி பேசுவதில்லை ...... அல்லது என் காதுபடப் பேசுவதில்லை ........ அல்லது நான் காது கொடுப்பதில்லை . சமயங்களுக்கு ஏற்ப இவற்றில் ஏதோ ஒரு காரணம் .


ஆனால் நானும் 'என்' குரலும் பரிமாறிக்கொள்ளும் உரையாடல்களை நான் அறிவேன் . அவை மெய் தரிசன சந்தர்ப்பங்கள் !

Life is never the same again after you read certain books ! எனக்குப் புதுமைப்பித்தன் அப்படி வாய்த்தது . சீலோவும் அங்கு வந்து விட்டார் . இந்த விஷயங்களையெல்லாம் நான் இப்போதுதான் கற்றுக்கொள்கிறேன் என்றில்லை ...... ஏற்கெனவே , பல தருணங்களில் உணர்ந்த விஷயங்களை ' உனக்கு இவை தெரியுமே' என்று அடையாளம் காட்டி என்னை மீண்டும் மெய் தரிசனத்திற்கு இட்டுச் சென்ற புத்தகம் இது ... அதுவும் தெளிவான விழிப்பு நிலையிலேயே !

உனக்கு ஒன்று உண்மையாக வேண்டுமானால் , இந்த மொத்த அண்டவெளியும் உனக்காக இரகசியமாய் ஒன்று கூடி உதவி செய்யும் என்று சீலோ சொல்கிறார் .

It is the possibility of having dreams come true that makes life interesting !